Chandrababu Naidu : தனக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஊழல் வழக்கில் சிக்கிய சந்திரபாபு நாயுடு:
ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் ஆந்திர பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு
இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:
இந்த நிலையில், திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி ஆகியோர் இன்று வழங்கியுள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதும் காவலில் எடுத்து விசாரித்ததும் செல்லும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினர்.
ஆனால், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17Aஇன் கீழ் ஆளுநரிடம் அனுமதி பெறுவது தொடர்பாக இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சட்ட பிரிவு 17Aஇன் கீழ் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு ஆளுநரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என மூத்த நீதிபதியான அனிருத்தா போஸ் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆனால், அப்படி அனுமதி பெற தேவையில்லை என பீலா திரிவேதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, புதிதாக சேர்க்கப்பட்ட சட்ட பிரிவு 17A இந்த விவகாரத்தில் பொருந்தாது என நீதிபதி பீலா திரிவேதி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிடுவதற்காக இந்திய தலைமை நீதிபதியிடம் வழக்கு அனுப்பப்பட்டுள்ளது.