உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


உயர் நீதிமன்றங்களுக்கு புது தலைமை நீதிபதிகள்:


இந்த நிலையில், ஐந்து உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா, கவுகாத்தி, ஜார்க்கண்ட், அலகாபாத் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.


ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த அகஸ்டின் ஜார்ஜ் மாசி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து, ராஜஸ்தான் தலைமை நீதிபதி பதவி காலியாகிவிட்டது. இதை தொடர்ந்து, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இச்சூழலில், தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற உள்ளார்.


மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியைாக பதவி வகித்த ரவிசங்கர் ஜா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி பரிந்துரைக்கப்பட உள்ளார்.


கொலீஜியம் அமைப்பு மீது சரமாரி குற்றச்சாட்டு:


நீதிபதி பிரிதிங்கர் திவாகர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, காலியாக உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியின் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்தது. கவுகாத்தி தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சந்தீப் மேத்தா, உச்ச நீதிமன்றத்துக்கு பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் நியமனம் செய்யப்பட உள்ளார்.


ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதிபதி பி.ஆர்.சாரங்கியை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கொலீஜியம் அமைப்பு மீது சரமாரி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வரும் நிலையில், ஐந்து உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 


நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்ப வேண்டும் என நீதித்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


டிசம்பர் 1ஆம் தேதி வரை, 5 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 856 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மாவட்டம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.