சில கசப்பான உண்மைகளை உணர்வதாகவும், இந்திய நீதித்துறையில் பெண்களின் இன்னல்களைக் குறித்தும், கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிறப்புரை ஆற்றியுள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபது என்.வி.ரமணா. பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் கடுமையாக உழைப்பதாகவும், வெறும் சிலரே உயர் பதவிகளை நீதித்துறையில் பெறுவதாகவும் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார் தலைமை நீதிபதி.
பார் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரெண் ரிஜுஜு ஆகியோரின் முன்னிலையில் தலைமை நீதிபதி வெளிப்படையாக பிரச்சனைகளை முன்னிறுத்திப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
``பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். உயர் பதவிகளில் பெண்களின் இடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழிந்த பிறகு, அனைத்து துறைகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு நிகழ்ந்திருக்கும் என ஒருவர் எதிர்பார்த்தால், அவர் ஏமாந்து போவார். ஏனெனில் உச்சநீதிமன்ற அமர்விலேயே வெறும் 11 சதவிகிதம் பெண்கள் மட்டுமே உள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹிமா கோஹ்லி, பி.வி. நாகரத்னா, பெலா எம். திரிவேதி ஆகிய பெண்கள் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளனர்” என்று கூறியுள்ளார் தலைமை நீதிபதி எம்.வி.ரமணா.
``இந்தத் தொழிலில் அனுபவத்தில் மூத்தவர்களுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது. உங்களை விட அனுபவத்தில் மூத்தவர்களுக்கு அவர்களது அனுபவத்திற்காகவும், அறிவுக்காகவும் மரியாதை வழங்குங்கள். உடன் பணியாற்றும் பெண்களை மதிப்பதோடு, கண்ணியமாக நடத்துங்கள். நீதித்துறையையும், நீதிபதிகளையும் மதியுங்கள். இந்திய நீதித்துறையின் முன்னணியில் இருப்பவர்கள் நீங்கள் என்பதால், நமது துறையைப் பாதுகாப்பது உங்களின் கடமை. நியாயமானவற்றிற்கும், நீதிக்கும் எழுந்து குரல் கொடுங்கள்’’ என்று பார் கவுன்சில் உறுப்பினர்களிடம் உரையாற்றியுள்ளார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
மேலும் அவர், ``இந்திய நீதித்துறையில் கட்டமைப்புக் குறைபாடுகள், நீதிமன்ற நிர்வாகப் பணியாளர் தட்டுப்பாடு, நீதிபதிகள் தட்டுப்பாடு முதலானவை நீடிக்கின்றன. இந்தியாவுக்குத் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற புதிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனது உயர் நீதிமன்றப் பணிக்காலத்தின் போது, பெண்களுக்குக் கழிவறை வசதிகள் இல்லாததையும் நேரில் கண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
``தற்போது வழக்கறிஞர் தொழிலில் புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது. வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக, புதிய வழக்கறிஞர்கள் பலரும் கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களில் பணியில் சேர்வதால், பழைய முறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. எளிய மக்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விதிக்கும் கட்டணத்தை அளித்து சட்ட உதவி பெற முடியாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீதியை முடிந்தவரை தாமதமின்றி நாம் வழங்கினாலும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்றங்களை நாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சரிசெய்ய வேண்டும்’’ என்றும் கூறியுள்ளார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.