உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த விஜய் மல்லையா வழக்கில் வரும் 2022ஆம் ஆண்டு, ஜனவரி 18 அன்று தொழிலதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் இயங்கும் பல்வேறு வங்கிகளுக்குச் சுமார் 9000 கோடி ரூபாய் கடனை விஜய் மல்லையா திரும்பத் தராததால் அவர் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. 


`இந்த வழக்கை ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளிவைக்க விரும்புகிறோம். ஏனென்றால் இந்த வழக்கிற்காக நாம் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இனியும் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த விவகாரம் என்றேனும் ஒரு நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவும், தீர்வு காணப்படவும் வேண்டும்’ என்று நீதிபதி யூ.யூ.லலித் தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



விஜய் மல்லையா


 


சிறப்பு நீதிமன்ற விசாரணையில் விஜய் மல்லையா டியாஜியோ மதுபான நிறுவனத்திடம் இருந்து பெற்ற 40 மில்லியன் அமெரிக்க டாலரை அவர் தனது குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதற்கான ஆதாரம் கிடைத்ததால், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கின் மனுவை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விஜய் மல்லையா பெற்ற 40 மில்லியன் அமெரிக்க டாலரைப் பற்றி அறிவிக்கவில்லை எனக் கூறி தாக்கல் செய்திருந்தது.  இந்த வழக்கில், வங்கிகளுக்குச் சொந்தமான பணத்தைத் திரும்ப அளிக்குமாறு விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 


கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா அளித்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, அவரது தண்டனைக் குறித்த விவரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். எனினும் லண்டனில் அவருக்குச் சில வழக்குகள் நடைபெற்று வருவதால், அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று விஜய் மல்லையா தரப்பில் கூறப்பட்டது. 



விஜய் மல்லையா


 


நீதிபதிகள் யூ.யூ.லலித், எஸ்.ஆர்.பட், பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த விவகாரத்தை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாகவும், விஜய் மல்லையா நேரில் வர விரும்பினால் லண்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், அவர் விரும்பாவிட்டால் அவரது வழக்கறிஞர் அவர் சார்பாகப் பேச வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த ஜனவரி 18 அன்று, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு விஜய் மல்லையாவை லண்டனில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், சில சட்டப் பிரச்னைகளால் இந்த விவகாரம் தள்ளிப் போவதாகவும் தெரிவித்திருந்தது.