பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடைய லோக் இன்ஸாஃப் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சிம்ரன்  ஜித் சிங் பைன்ஸை வருகின்ற 3 பிப்ரவரி வரை கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் போலீஸுக்கு அறிவுறுத்தியுள்ளது. 
முன்னதாக பஞ்சாப் தேர்தலில் பைன்ஸ் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் பிப்ரவரி 23 வரை அவர் கைது செய்யப்படாமல் இருப்பார் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கு தாக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


இதில் கருத்து கூறியிருந்த நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, ‘நாங்கள் அவருக்குச் சாதகமாகச் செயல்படவில்லை.உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இதுவரை உத்தரவை எதுவும் பிறப்பிக்கவில்லை. மேலும் 23 வரை அவர் கைது செய்யப்படமாட்டார் என்றுதான் சொன்னோமே ஒழிய அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனச் சொல்லப்படவில்லை. 23க்குப் பிறகு அவர் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளது.


இருந்தாலும் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டவர் தரப்பு வழக்கறிஞரான ககன் குப்தாவின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம் தற்போது பிப்ரவரி 3 என மறுவரையறை செய்துள்ளது. 


அவரது கருத்தில், ‘அவரை கைது செய்யச் சொல்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது.இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அவர் மீது ஏற்கெனவே 20 வழக்குகள் வரை நிலுவையில் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து இந்தக் கோரிக்கையை ஏற்று வருகின்ற 3 தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது உச்சநீதிமன்றம். அதுவரை பைன்ஸ் கைது செய்யப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 


பைன்ஸ் லூதியானா மாவட்டத்தின் அதம் நகர் தொகுதியைச் சேர்ந்தவர். 


அண்மையில்தான் இதே கட்சியைச் சேர்ந்த பிக்ரம் சிங் மஜிதிய என்பவருக்கு போதைப் பொருள் வழக்கில் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி உண்டு. வேண்டுமென்றே வழக்குகள் பதியப்படுவது போன்று யாருக்கும் தோன்றிவிடக்கூடாது என அது தொடர்பான தனது விளக்கத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.


 


முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


நாட்டில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், உத்தரபிரதேச மாநில சட்டசபை அளவிற்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல். பஞ்சாபில்  மொத்தம் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.