வெறுப்பை தூண்டும் விதமான பேச்சு சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சு, சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் அழிவை உண்டாக்குகிறது. இம்மாதியான வெறுப்பு பேச்சை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  சமீபத்தில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் செய்தி தொலைக்காட்சிகளை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், இதில் அரசு ஏன் அமைதி காக்கிறது? என்ற கேள்வி எழுப்பியிருந்தது. 


வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள்:


இந்த நிலையில், வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் வெறுப்பு பேச்சை நிறுத்திவிடவில்லை. வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சுகளுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.  தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல வழக்குகளில் காவல்துறை அமைதி காத்து வருகிறது. பார்வையாளராக மட்டுமே உள்ளது. இதில், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு, "கடந்த காலங்களில் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளால் களத்தில் வித்தியாசம் தெரிகிறது. இப்படியிருக்கும்போது, ஏன் நெகட்டிவாக பார்க்கிறீர்கள்" என கேள்வி எழுப்பியது.


இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நாங்கள் இதை நெகட்டிவாக பார்க்கவில்லை. எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்.


கபில் சிபலிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி: 


இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும், அவர்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பதிலும் இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றும் மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அந்த அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக வெளிப்படையாக வெறுப்பு பேச்சு பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான், மனுதாரர் தரப்பில் கபில் சிபல் ஆஜரானார்.


இறுதியில், வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு யவத்மால் மற்றும் ராய்ப்பூரில் உள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.