LIC shares: இந்திய பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கின் விலை 900 ரூபாயை எட்டியதன் மூலம், நாட்டின் மதிப்புமிக்க பொதுத்நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.


புதிய உச்சம் தொட்ட எல்ஐசி பங்கின் விலை:


லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், பங்குச் சந்தையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி,  நிறுவனத்தின் பங்கின் விலை முதல் முறையாக 900 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து பட்டியலிடப்பட்டதிலிருந்து, இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும்.


எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 900 ரூபாயை எட்டியது என்பது, பங்குச் சந்தையில் அதன் 52 வாரத்தில் வந்த உச்சமாகும். இதன் மூலம், எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை  விட மிஞ்சியுள்ளது.


நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனம்:


கடந்த 2022ம் ஆண்டு எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தையில் ரூ.875.25 க்கு பட்டியலிடப்பட்டன.  அதே சமயம் பட்டியலிடுவதற்கு முன் அதன் வெளியீட்டு விலை (IPO) 949 ஆக இருந்தது.  இருப்பினும், இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவையே சந்தித்து வர, அதிகபட்சமாக 530 ரூபாய் வரை சரிந்தது. இருப்பினும், கடந்த நவம்பரில் எல்ஐசி பங்குகள் 12 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைக் கண்டபோது பங்குகளின் மதிப்பு மீண்டு வர தொடங்கின.


டிசம்பரில் எல்ஐசி பங்குகள் 22.52 சதவிகிதம் உயர்ந்து, ஜனவரி 2024 இன் முதல் இரண்டு வாரங்களில் 7.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், தற்போதும் இந்த பங்குகளின் விலை IPO விலையில் இருந்து 6.21% வரை குறைவாக உள்ளது. இருப்பினு,  தொடர் ஏறுமுகத்தால் எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.5.66 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரித்துள்ளது . எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு என்பது ரூ.5.63 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி உருவெடுத்துள்ளது. ஆனால், கூடிய விரைவில் எஸ்பிஐ வங்கி மீண்டும் முதலிடம் பிடிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.


அரசின் திட்டம்:


எல்ஐசி முதலிடத்தைப் பெற்றிருந்தாலும், நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்த நிலையில் முதன்முறயாக, எல்ஐசியின் பங்கு விலைகள் வெளியீட்டு விலைக்கு நிகரான நிலையை எட்டியுள்ளது.  எல்ஐசி பங்கு இப்போது பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக இருந்தாலும், அவை இன்னும் ஐபிஓ விலைக்குக் குறவாகவே உள்ளன. நிதி திரட்டும் நோக்கில் காப்பீட்டு நிறுவனத்தின்  21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றது. இந்நிறுவனத்தில் அரசாங்கம் இன்னும் 96.5 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது.