இந்தியாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களை பொறுத்தவரை, அதற்கு இந்திய தேர்தல் ஆணையமே பொறுப்பு. சுதந்திரம் பெற்று 1950ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு இருந்த அதிகாரத்தை முழுவதுமாக பயன்படுத்தி கொண்டது டி.என். சேஷன் ஆவார்.
ஒரு கட்டத்தில், வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு பெட்டிகளை எடுத்த சென்ற சம்பவம் எல்லாம் இந்தியாவில் நடந்தது. ஆனால், டி.என். சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்த காலத்தில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தேர்தல் தொடர்பாக, பல சீர்திருத்தங்கள் அவரின் பதவிகாலத்தில்தான் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு வந்த தலைமை தேர்தல் ஆணையர்களும், கடும் விதிகளை பின்பற்றி தேர்தலை சுதந்திரமாக நடத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், சமீப காலமாகவே இந்திய தேர்தல் ஆணையம் உள்பட தன்னாட்சி அமைப்புகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தன்னாட்சி அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றம், மத்திய அரசை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது.
குறிப்பாக, குறுகிய பதவி காலம் இருப்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
"இதற்கு சான்றாக, தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவி காலம் உள்ளது. 1950களில் 8 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை தேர்தல் ஆணையர்கள் பதவி காலம் இருந்தது. ஆனால், 2004ஆம் ஆண்டுக்கு பிறகு, அவர்களின் பதவிக்காலம் சில நூறு நாட்களாக குறைந்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவி காலம் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக சொல்லி, குறுகிய கால பதவி காலத்தை அளித்ததால் அதன் சுதந்திரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரிக்கையில், "முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வெறும் எட்டு ஆண்டுகளில் ஆறு தலைமை தேர்தல் ஆணையர்களை நியமித்தது. தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு, 2015 முதல் 2022 வரை, ஏழு ஆண்டுகளாக, எட்டு தலைமை தேர்தல் ஆணையர்களைப் நியமித்துள்ளது.
தேர்தல் ஆணைய சட்டம், 1991இன்படி பரிந்துரைக்கப்பட்ட ஆறு ஆண்டு கால முழு பதவிகாலத்தை நெருங்கக் கூட முடியாதவர்களை, 2004ஆம் ஆம் ஆண்டுக்கு பிறகான அரசுகள், தெரிந்தே தேர்வு செய்து தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமித்து வருகிறது" என தெரிவித்தது. 1991 சட்டம், பிரிவு 4இன்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை ஆகும்.
"இது, மிக, மிக, மிக கவலை தரும் போக்கு. குறிப்பாக, 2004ஆம் ஆண்டுக்கு பிறகு, குறுகிய காலம் பதவி காலத்தில் இருப்பவர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கும் போக்கு தொடங்கியது. அவர்களின், பிறந்த தேதி, அரசுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இந்த நபர்கள் ஒருபோதும் ஆறு ஆண்டுகால பதவிகாலத்திற்கு நெருங்க கூட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.