ராஜஸ்தானில் தேர்தல் தேதி மாற்றப்பட்டதை தொடர்ந்து மிசோரமிலும் வாக்கு எண்ணிக்கை நாளை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


5 மாநில சட்டமன்ற தேர்தல் 


2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸூம் மீண்டும் அதிகார பலத்தை பெற போட்டியிட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 


மிசோரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் வாக்குப்பதிவு நாள் மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் தேர்தல் தேதி மாற்றம் 


இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியை மாற்றக்கோரி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. நவம்பர் 23ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம்  சுப முகூர்த்த நாள் என்பதால் குறிப்பிட்ட அந்த தேதியில் திருமணங்கள், சுப நிகழ்வுகளை நடத்தவும் பொது மக்கள் திட்டமிட்டிருப்பதால் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நவம்பர் 25ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


மிசோரம் சார்பில் கோரிக்கை 


இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு, டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குகளும் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தினம் கிறிஸ்தவர்களின் புனிதமான நாளாகும். நாடு முழுக்க தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படும். எனவே வாக்கு எண்ணிக்கை நாளை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது மிசோரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 




மேலும் படிக்க: Rajasthan Election: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்.. இதான் காரணமா?