Summer : இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தியா முழுவதும் கோடை காலம் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கியது. அம்மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாகவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகா பத்ரா நேற்று காணொலியில் நிருபர்களிடம் கூறுகையில்,
3 மாதங்களுக்கு வெயில்
”இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும். அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும். தென் இந்திய தீபகற்ப பகுதி மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பை விட குறைவான அளவில் வெப்ப நிலை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு இயல்பை விட சில மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்கள் அதிகளவில் இருக்கும். அதன்படி, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
இந்த மேற்கண்ட மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட குறைவான அளவில் மழை பெய்யக்கூடும். ஆனால் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியதோடு, வெப்ப அலைகளின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
மழை நிலவரம்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயல்பான மழை பெய்யலாம். 1971ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான கடந்த காலத்தை ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் சராசரியாக 26 சதவீதம் (அதிகம்) மழை பெய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த மாதத்தில் இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமான மழை, நாட்டின் வடமேற்கு, மத்திய, தீபகற்ப பகுதிகளில் எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மகா பத்ரா தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க