செல்வ மகள் திட்டத்தில் இரண்டு நாட்களில் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மொத்த சராசரிக் கணக்கில் மூன்றில் ஒரு பங்காகும். 


பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் செல்வ மக்கள் திட்டத்தின் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வாரத் தொடர் பிரச்சாரத்தை அடுத்து, இந்த சாதனை செய்யப்பட்டுள்ளது.   


பெண் குழந்தைகளின் கல்வி, மேம்பாடு, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வ மகள் சிறு சேமிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையங்களில் செல்வ மகள் திட்டத்தைத் தொடங்கலாம்.


இந்தத் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச வைப்பு நிதியாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆயிரம் ரூபாயாக இருந்த குறைந்தபட்ச வைப்பு நிதி, 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. 


திட்டத்தின் சலுகைகள்


ஆண்டுதோறும் செலுத்தி வரும் தொகையை மொத்தமாக, பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி ஆனவுடன் முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்காத பட்சத்தில் அதிகபட்சமாக 21 வயது வரை இந்த முதலீட்டிற்கு வட்டி வழங்கப்படும். பின்னர் முதிர்வுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இடையில், மருத்துவத் தேவை உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக குறிப்பிட்டத் தொகையை உரிய சான்றிதழ்களுடன் எடுத்துக்கொள்ள முடியும். 


வரி விலக்கும் உண்டு


பெண்ணின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பின்போ, 18 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்து மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.


மாறும் வட்டி 


சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுவது போலவே, செல்வ மகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 


இந்நிலையில் செல்வ மகள் திட்டத்தில் இரண்டு நாட்களில் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது மொத்த சராசரிக் கணக்கில் மூன்றில் ஒரு பங்காகும். 



7.5 லட்சம் கணக்கு


பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சுகன்யா ஸ்மரித்தி யோஜனா எனப்படும் செல்வ மக்கள் திட்டத்தின் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 முதல் 8ஆம் தேதி வரை ஒரு வாரம் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்று அழைக்கப்படும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து, 7.5 லட்சம் செல்வ மக்கள் கணக்குகளைத் தொடங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இந்திய அஞ்சலகம் ஒரு வாரத்துக்கு தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 


இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் இந்தக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்திய அஞ்சல் அலுவலகத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: Sukanya Samriddhi Yojana : உங்கள் செல்ல மகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. என்னென்ன பலன்கள் இருக்கு?