ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 7 ஆண்டுகளில் நிகழ்ந்த மாணவர்களின் தற்கொலை குறித்த புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


மக்களவையில் நேற்று (டிச.20) கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களின் தற்கொலை குறித்த விவரங்களை அளித்துள்ளார். அதன்படி 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை, ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற மத்திய அரசு நிதி உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில், மொத்தம் 122 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 


இறந்தவர்களில் 24 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பையும் (SC), 41 பேர் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும் (OBC), 3 பேர் பழங்குடி வகுப்பையும் (ST) சேர்ந்தவர்கள். இதில் 3 பேர் சிறுபான்மை இனத்தவர்கள். அதிகபட்சமாக மத்தியப் பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்களும் ஐஐடிகளில் 34 மாணவர்களும் தங்களின் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளனர். 


இவற்றில் ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரது தற்கொலைகள் மட்டுமே நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பிற தற்கொலைகள், மற்ற பல மரணங்களைப் போல சாதாரணமாகவே கடந்து சென்றன. 




தற்கொலை செய்து கொண்டோரில் பெரும்பாலான மாணவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் பிறந்து, விளிம்பு நிலையிலேயே வளர்ந்து, ஏராளமான அவமானங்களைச் சந்தித்தவர்கள். நெஞ்சம் நிறைய லட்சியங்களையும் உயர் குறிக்கோள்களையும் சுமந்து, அதை அடைய ஆயிரக்கணக்கானோருடன் போட்டியிட்டு, வென்றவர்கள். பற்பல கனவுகளுடன் உயர் கல்வி நிறுவனங்களின் படியை மிதித்தவர்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி அந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பின்னால் என்ன பிரச்னைகள் இருந்திருக்கக் கூடும்?  


இதுகுறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ''மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள சாதி, மதம், பாலியல் ரீதியான பாகுபாடுகளை இதுவரை நாம் உணரவே இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை. இவற்றின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் பாகுபாடுகள் மட்டும் மாறவில்லை. 


கல்வி நிலையங்களில் மாணவர்களின் நியாயமான எதிர்ப்புக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படித்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா, 2016-ல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் முன்னால் எழுதிய கடைசிக் கடிதத்தை நீங்கள் அனைவருமே படித்திருப்பீர்கள். 'நான் நட்சத்திரம் ஆகவே ஆசைப்படுகிறேன்; ஆனால் வெறும் எண்ணிக்கையாகவே இருக்கிறேன்' என்றார் வெமுலா. 'நானும் மற்றவர்களைப் போல அமைதியாகவே இருக்க விரும்பினேன். ஆனால், என் வரலாறு என்னை அமைதியாக இருக்கவிடவில்லை' என்றும் எழுதியிருந்தார். 


 



ரோஹித் வெமுலா


அங்கீகரிக்க மறுக்கும் நிறுவனங்கள்


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தலித் ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன், 'சமத்துவம் மறுக்கப்பட்டால் அனைத்துமே மறுக்கப்பட்டதற்குச் சமம்' என்று எழுதிவைத்துவிட்டு மாண்டார். மாணவர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்த முயலும்போது அதை அங்கீகரிக்க மறுக்கும் நிறுவனங்களால், அவர்களுக்கு ஏற்படும் வலிதான் தற்கொலைக்கு அவர்களைத் தள்ளுகிறது'' என்கிறார் கஜேந்திர பாபு. 


தற்கொலை எண்ணங்களே தற்காலிகமான உணர்ச்சிகள்தான். கோபம் கண்களை மறைக்கும் என்பதைப்போல, இத்தகைய எண்ணங்கள் அறிவுபூர்வமான சிந்தனையைத் தடை செய்கின்றன. பொதுவாக ஒரு தற்கொலைக்கு 3 முக்கியக் காரணிகள் அடிப்படையாக இருக்கும் என்கிறார் மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 


''முதலாவது நம்பிக்கையின்மை (Hopeless)- நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வே கிடைக்காது என்று நினைப்பது. இரண்டாவது, கையறுநிலை (Helpless)- நமக்கு உதவி செய்ய ஆட்களே இல்லை என்று நினைப்பது. மூன்றாவது, பயனற்றதாய் உணர்வது (Worthless)- என்னால் இதைத் தீர்க்க/ முடிக்க முடியாது என்று யோசிப்பது. 


குற்ற உணர்ச்சி


பொதுவாக புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு உயரிய குறிக்கோள், லட்சியங்கள் இருக்கும். அதுகுறித்த கனவும் நம்பிக்கைகளும் மிதமிஞ்சி இருக்கும். அவை நடக்காமல் போகும்போது, குற்ற உணர்ச்சி ஏற்படும். 


 



மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்


வழக்கமாக இத்தகைய கல்லூரிகள் வேறு மாநிலத்திலோ, மாணவர்களின் சொந்த ஊரில் இருந்து வெகு தூரத்திலோ இருக்கும். அதேபோல இந்தி மொழி, நவீன ஆங்கிலம், தொழில்நுட்பங்களேகூட மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். உணவுப் பழக்கங்கள், கலாச்சார வழக்கங்களும்கூட அதிர்வை  ஏற்படுத்தலாம். 


மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த உடனேயே சாதி, மொழி, மதப் பாகுபாடுகளைக்கூட சந்திக்க வேண்டியிருக்கும். இதை எதிர்கொள்ள முடியாததாலும் உளவியல் அழுத்தம் ஏற்படலாம்.  நம்முடையவை மீளவே முடியாத, தீர்க்கவே தெரியாத பிரச்சினைகள் என்று யோசிக்கும்போதுதான் தற்கொலை எண்ணம் தூண்டப்படுகிறது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கச் சென்றதால், அதுகுறித்த பெருமிதங்களும் நம்பிக்கையும் பெற்றோரிடமும் நண்பர்களிடமும் இருக்கும். அதைக் கெடுத்துவிடுவோமோ என்ற குற்ற உணர்ச்சியும் மேலிடும் என்கிறார் மருத்துவர் ஜி.ராமானுஜம். 


ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, ஏகப்பட்ட அவமானங்களைத் தாங்கியும் தாண்டியும் தங்களின் தகுதியால் பெருமைமிகு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களிடம், ஒரே படிப்பு படித்தாலும் அங்குள்ள அனைவரும் ஒன்றில்லை என்று பொட்டில் அடித்தாற்போல அடிக்கடி உணர்த்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் மாணவர்களின் உறுதி குலைவதாகக் கூறுகிறார் கஜேந்திர பாபு. 


 



கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு


''சக மாணவர்களுடனான ஒப்பீடு, மொழிப் பிரச்சினை என அனைத்துமே இவற்றுடன் பின்னிப் பிணைந்தவைதான். இதைத் தடுக்க முதலில் அரசு, கல்வி நிறுவனங்களில் பாகுபாடு இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை அங்கீகரித்தாலே அதற்கான தீர்வுகளை உருவாக்கும் தேவை தானாக உருவாகும். நோய் இதுதான் என்று அறிவிக்காமல், மருத்துவர் எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?


மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் அலுவலகத்தோடு சாதி முடிந்துவிட வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், கண்காணிப்புக் குழு அவசியம் அமைக்கப்பட வேண்டும். மதிப்பீடுகளில் சமூக ரீதியில் பின்தங்கிய சமூகத்துக்குச் சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும். பிற மாணவர்கள், இவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்கிறார் கஜேந்திர பாபு.  


மாணவர் ஆதரவு குழுக்கள் அவசியம்


மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் ஆதரவுக் குழுக்கள் அவசியம் என்கிறார் மருத்துவர் ஜி.ராமானுஜம். ''உதாரணத்துக்குத் தமிழ் மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள் என்றால், அங்கு இறுதியாண்டு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ் பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆதரவுக் குழு அமைக்கப்பட வேண்டும். நிர்வாகத் தரப்பில் உளவியல் ஆலோசனைக்கெனத் தனிக்குழு அமைக்கப்பட வேண்டும். பெயர் குறிப்பிடாத வகையில், கடிதங்கள் வாயிலாகக் கருத்துக்கேட்பு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.


எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தற்கொலை எண்ணங்கள் எல்லோருக்கும் வரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமே என்பதை நினைவில்கொள்ள வேண்டும், 


பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பிரச்சினைகளை, முறையீடுகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். 'இதுதான் நம் வாழ்க்கை. எப்படியாவது சிரமப்பட்டு, பழகிக் கொள்!' என்று உணர்வுப்பூர்வமாக மிரட்டக் கூடாது. 




மாணவர்களுக்கு...


அடுத்தவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். 


தன்னுடைய படிப்பு மீது அலாதியான ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அத்துடன் வாசிப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தலாம். 


பிரச்னைகளை 2, 3 மாதங்கள் பொறுமையாகக் கையாண்டு பார்க்கலாம். ஆரம்பத்தில் மலையெனத் தெரிந்த சிக்கல்கள் மடுவெனக் குறைந்திருக்கும். அவ்வாறு நடக்காத தருணங்களில் சம்பந்தப்பட்ட படிப்பை அங்கேயே தொடராமல் நிறுத்துவது குறித்து யோசிக்கலாம். பெருமைவாய்ந்த கல்லூரிப் படிப்பு வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற குற்ற உணர்ச்சிக்கு நிச்சயம் ஆளாக வேண்டியதில்லை. 


பாலியல், சாதி, மதம் உள்ளிட்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும்போது தைரியத்துடன் இருக்க வேண்டும். இது நம்முடைய தவறுதான் என்று எவ்விதக் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகாமல், மாணவர்கள் தானாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட கல்லூரியில் படிப்பு இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை, எதிர்காலமே இல்லை என்று நினைக்கக் கூடாது. நம் உயிரை விட இந்த உலகத்தில் பெரியது எதுவும் இல்லை என்பதை நினைவில் இருத்த வேண்டும்'' என்று மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம் தெரிவித்தார்.