தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய போன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை பிரியங்கா காந்தி முன்வைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் வெல்லும் முனைப்பில் பாஜகவும், பழைய நிலையை கொண்டு வர வேண்டும் என்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வரும் பிரியங்கா காந்தி மோடியின் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் மக்களை அடிக்கடி அவர்களுக்கு நெருக்கமாக சென்று மனதை கவர்ந்து வருகிறார்.
இதனிடையே பிரதமர் மோடி அரசின் திட்டங்களை அகிலேஷ் யாதவின் உதவியாளரும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான ராஜீவ் ராய் கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பழிவாங்கும் நோக்கிலே சோதனை நடத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். மேலும், “எங்களது கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. எல்லா மாலைப்பொழுதும் உ.பி முதல்வர் ஒலிப்பதிவுகளைக் கேட்கிறார். இந்த ரெய்டுகள் அனைத்தும் தேர்தலில் பாஜக தோற்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாகும்'' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "அநேகமாக அகிலேஷ் ஆட்சியில் இருந்தபோது இதேபோன்ற செயலைச் செய்திருக்கலாம். அதனால், அவர் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார்" என்றார். இந்நிலையில்தான் பிரியங்கா காந்தி “எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார். “போன் ஒட்டுக்கேட்பது ஒருபுறமிருக்க, அவர்கள் எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை கூட ஹேக் செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியங்கா காந்திக்கு மிரயா வத்ரா(18), ரைகான் வத்ரா(20) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்