புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் சூரியஒளி மின்சக்தி திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பது மற்றும் திட்ட விவரங்கள் தொடர்பாக தனி இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.


இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:   மத்திய அரசு சூரியஒளி மின்சாரம் தயாரிக்க வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு மானியத்துடன் கூடிய திட்டம் அறிவித்துள்ளது. ஒரு கிலோவாட்டில் இருந்து 10 கிலோவாட் வரை சூரிய மின்தகடு அமைக்கலாம். ஒரு கிலோவாட் முதல் 3 கிலோவாட் வரை சூரியஒளி மின்நிலையம் அமைக்க 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. 3 முதல் 10 கிலோவாட் வரை 20 சதவீதம் மானியம் தருகிறது. ஒரு கிலோவாட் மின்சக்தி கூரை அமைக்க 35,900 ரூபாய் செலவாகிறது ஆகிறது. அதில் 40 சதவீத மானியமாக 14,360 ரூபாயை மத்திய அரசு தருகிறது. இதேபோல் 3 முதல் 10 கிலோவாட் வரை மின் திறனுடைய சூரியஒளி நிலையம் அமைப்பதற்கான மொத்த மூலதன செலவு கிலோவாட்டிற்கு 34,900 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளி, கிலோ வாட்டிற்கு 27,920 ரூபாய் செலுத்தலாம்.




புதுவை மாநில மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் மின்சார பயன்பாடு குறைந்து மின்கட்டணம் குறையும். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். புதிதாக அமைக்கப்படும் கூரை மீதான சூரிய மின் உற்பத்தி நிலையங்களை மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை https://solarrooftop.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மானியத் தொகை பெறலாம் என்று குறிப்பிட்டார்.


இத்திட்டம் தொடர்பாக மின்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு,  புதுவை மக்கள் தங்களின் சொந்த பயன்பாடு அல்லது விற்பனைக்கு, ஒரு கிலோவாட்டில் இருந்து 10 கிலோவாட் வரை சிறிய மின்திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையங்களை தங்கள் வீடுகளில் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு புதுவை அரசு மின்துறை மூலம் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும். வரும் இரண்டு ஆண்டுகளில் புதுவையில் மொத்தம் 30 மெகாவாட் திறனுடைய சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க புதுவை மின்துறை திட்டமிட்டுள்ளது.




ஒரு கிலோவாட் சூரியஒளி மின் நிலையம் அமைக்க சுமார் பத்து சதுர மீட்டர் (100 சதுர அடி) நிழல் இல்லாத கூரைப்பகுதி தேவைப்படுகிறது. ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின்நிலையம் மூலம் மாதத்திற்கு 135 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் வீட்டின் உரிமையாளர் மாதம் குறைந்தபட்சம் 300 ரூபாய் வரை சேமிக்கலாம்.




முறையாக பராமரிக்கப்பட்டால் சூரியஒளி மின் நிலையத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். இதில் ஏற்படும் செலவினம் சுமார் 7 ஆண்டுகளில் ஈடு செய்யப்படுகிறது. ஆகவே எட்டாம் ஆண்டு முதல் சூரிய மின் உற்பத்தி கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கும். சூரிய மின் உற்பத்தி நிலையங்களை வெற்றிகரமாக நிறுவிய பிறகே மத்திய அரசு வழங்கும் மானியம் மின்துறையால் இந்த மேம்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதுபற்றி மேலும் தகவல் அறிய 9489080400 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.