வேலையில்லா திண்டாட்டம் நாட்டை உலுக்கி வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8.3% ஆக உயர்ந்துள்ளது.


கடந்த 12 மாதங்களில் இதுவே அதிக வேலையின்மை விகிதம் ஆகும். ஆகஸ்ட் 2021இல், வேலையின்மை விகிதம் 8.35% ஆக இருந்தது. இதையடுத்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு அதிகரிப்பின் காரணமாக செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 6.43 சதவீதமாக குறைந்துள்ளது என CMIE தெரிவித்திருந்தது.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா பெருந்தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அதேபோல, வேலாண்மை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் பேரழிவின் விளம்பில் இருக்கின்றனர் என பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.


"சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் தங்களது நிலுவைத் தொகையையும் கடனையும் செலுத்த முடியாமல் பேரழிவின் விளிம்பில் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பொருளாதாரம் தள்ளாடுகிறது. இங்கிலாந்தில் ஒரு சில வாரங்களிலேயே இரண்டு பிரதமர்களை மாற்றினர். ஆனால் இங்கே, யாரும் முன் வரவில்லை. எதுவும் நடக்கவில்லை" என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார்.






பிரிட்டனில் சந்தை மற்றும் அரசியலில் கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியில், பதவியேற்ற 45 நாட்களிலேயே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக லிஸ் டிரஸ் அறிவித்தார். இதையடுத்து, அங்கு பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பொறுப்பு ஏற்றார். 


பதவியேற்ற ரிஷி சுனக், பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிராக ஸ்திர நிலையைக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்தார். பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.