பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில், இட ஒதுக்கீடு எவ்வளவு காலம் வரை தொடர வேண்டும் என்பது குறித்து பரபரப்பான கருத்தை இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற நீதிபதி பெலா திரிவேதி, 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் பார்வையையும், 1985இல் அரசியல் சாசன அமர்வு முன்மொழிந்ததையும், அரசியலமைப்புச் சட்டம் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஒரு கால அவகாசம் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்ததையும் நான் கூறியுள்ளேன். 


நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையிலும் கூட இதை சாதிக்கவில்லை. இந்தியாவில் இடஒதுக்கீடு முறை தோன்றியதற்கு இந்தியாவின் பழமையான சாதி அமைப்புதான் காரணம் என்பதை மறுக்க முடியாது. 


எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வரலாற்று அநீதியை நிவர்த்தி செய்ய, அவர்களுக்கு ஒரு சமமான வாய்ப்பை வழங்குவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளின் முடிவில், சமூகத்தின் பொது நலன்களுக்காக இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 334வது பிரிவை மேற்கோள் காட்டிய நீதிபதி திரிவேதி, "நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டிற்கான காலக்கெடுவை 334ஆவது அரசியலமைப்பு குறிக்கிறது. இது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. 


 






சட்டப்பேரவைகளில் எஸ்சி/எஸ்டியினருக்கான ஒதுக்கீட்டிற்கான தற்போதைய காலக்கெடு 2030. 104வது அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. 


அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் SC / ST / OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இதேபோன்ற காலக்கெடு வழங்கினால், அது சமத்துவ வர்க்கமற்ற மற்றும் சாதியற்ற சமூகத்திற்கு வழிவகுக்கும்" என்றார்.


பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ஏற்று கொண்ட நீதிபதி பர்திவாலா, இடஒதுக்கீடு காலவரையின்றி தொடர முடியாது என்றார்.