ஐரோப்பா இனிது, ஆஸ்திரேலியா இனிது என்பார்கள் நம் நாட்டு சுற்றுலா தலங்களை முழுமையாக அறியாதவர்கள்.
வெளிநாட்டை சுற்றிப் பார்க்கலாம் தவறில்லை. ஆனால் அதற்கு முன்னதாக நம்மூரில் இருக்கும் அழகியல் ததும்பும் இடங்களை பார்த்திருக்க வேண்டுமா இல்லையா? இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் தான் என்பர். அப்படியிருக்க இந்தியாவின் இந்த கிராமங்களைக் காண்பதை தவறவேவிடக் கூடாது என்றும் கூறுவர்.
மாவ்லின்னொங் கிராமம், மேகாலயா:
ஆசியாவின் மிகவும் சுத்தமான கிராமம் என்று அறியப்படுகிறது மாவ்லின்னோங் என்ற கிராமம். இது நம் தேசத்தில் 7 சகோதரிகளில் ஒருவரான மேகாலயா மாநிலத்தில் தான் இருக்கிறது. இங்குள்ள வேர்களால் ஆன பாலம், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
மலானா கிராமம், ஹிமாச்சல் பிரதேசம்:
மலானா என்பது குலு பள்ளத்தாக்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிராமம். இந்த கிராமத்தில் மிகக் குறைவான மக்களே வசிக்கின்றனர் என்றாலும் கூட இங்கு ட்ரெக்கர்ஸ் வருகை அதிகம். மிகவும் சுத்தமான காற்றும், ரம்மியமான சுற்றுப்புறச் சூழலும் இந்த மலானா கிராமத்திற்கு வந்தே ஆக வேண்டிய சிறப்பம்சமாகும்.
ரவாங்லா கிராமம், சிக்கிம்:
இந்த கிராமம் பச்சைப்பசேல் என புள்வெளி நிறைந்தது. விதவிதமான மலர்களும், அரிய விலங்குகள் கொண்ட பூமி இது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரிய விழாவைக் காண்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் குவிவதுண்டு.
நகோ, லஹோல் ஸ்பிட்டி:
நாட்டிலேயே அழகியல் ததும்பும் கிராமம் இதுதான் என்று கூறலாம். இங்குள்ள ஏரிகளில் ஆழத்தில் மணலில் என்னவிருக்கிறது என்று பார்க்கலாம். பனிக்காலத்தில் இந்த கிராமம் பனிபடர்ந்து ஸ்கீயிங் விளையாட்டுக்குத் தயாராகிவிடுகிறது. ஆகையால் இங்கு கோடைகாலத்தில் தான் அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடையில் இங்கு படகு சவாரி ரொம்ப பிரபலம். அதுமட்டுமல்லாது இங்கு பழைய பவுத்த துறவுக்கூடங்கள் பல இருக்கின்றன.
லாச்சென் கிராமம், சிக்கிம்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சென் என்ற இந்த கிராமம் கடல்மட்டத்தில் இருந்து 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. பனிபடர்ந்த சிகரங்களுக்கு ஊடே இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமங்கள் எல்லாம் சுற்றுலா பிரியர்கள் தவறவே விடக்கூடாத தலங்கள்.
ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எட்டு சிறிய மாநிலங்களைக் குறிக்கும். அவையாவன: அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள பல்வேறு பகுதிகளும் இயற்கை அன்னையால் நிறைவாக ஆசிர்வதிக்கப்பட்ட இடங்களாகவே உள்ளன.