டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் கொரோனா மெல்ல அதிகரித்து வரும் சூழலில், தேவைப்பட்டால் குறிப்பிட்ட பகுதிகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


டெல்லி, வசந்த் குன்ச் பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளிலும் புதிய தொற்று ஏற்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியில் நேற்று புதிதாக 325 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. தொற்று விகிதம் 2.39 சதவீதமாக உள்ளது.


நிலையை ஆய்வுசெய்த டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ’’கோவிட் 19 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட பகுதியையோ அல்லது வகுப்பறையையோ மட்டும் தற்காலிகமாக மூடிக் கொள்ளலாம். தேவையுள்ள நேரத்தில் முழு பள்ளியையுமே மூடிவிடலாம். இந்த விவகாரத்தில் அரசு எந்த முடிவும் முடிவெடுக்கும் அனுமதியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அளித்துள்ளோம்.


பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 


கை கழுவுவது, சானிட்டைசர் பயன்பாடு ஆகியவற்றைக் கைவிடாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு வருவோரிடம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.




தேசியத் தலைநகரின் நிலைமையை ஆய்வு செய்ய டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டம் ஏப்ரல் 20 அன்று நடைபெற உள்ளது’’ என்று துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.


கொரோனா பொது முடக்கம் மற்றும் தொற்றுப் பரவலை அடுத்து, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் அண்மையில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வை முன்னிட்டு வகுப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் டெல்லி மாநிலப் பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் மீண்டும் ஆரம்பித்துள்ள கோவிட் - 19 தொற்றுப் பரவல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண