மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வியில் கவனம் இருக்கிறாதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கிறார்களா என்ற கேள்வியை தங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி மாணாவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 


2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி 'பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில்  கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள் குறித்தும் அவை அளிக்கும்  அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 


இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  போட்டி ஒன்று நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.தேர்வுகள் குறித்தும் அது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். 


கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.






இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர் மாணவர்களிடம் பேசுகையில், ”மாணவர்கள் தங்கள் கல்வி குறித்து சிந்திக்க வேண்டும். ஆன்லைன் வழியாக நடக்கும் வகுப்புகளில், கவனம் முழுவதும் பாடம் கற்பதில் இருக்கிறதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணடிக்கிறோமா என்ற கேள்வியை மாணவர்கள் அனைவரும் தங்கள்ளுக்குள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக மாணவர்கள் உணரக்கூடாது.


மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. அதேபோல், பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முழு சுதந்திரத்துடன் அனுமதிக்கப்பட வேண்டும்.




தேர்வுகளை நினைத்து மாணவர்கள் அச்சம் கொள்ளக்கூடாது. தேர்வுகளின்போது மாணவர்கள் பயத்திடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நண்பர்களை போன்றே நாமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எதைச் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நீங்கள் அனைவரும் உங்கள் தேர்வை திருவிழா போல கொண்டாட்ட மனநிலையில் சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்


மேலும், தேசியக் கல்விக் கொள்கை NEP 2020-இன் பல்வேறு நன்மைகள் விரைவில் நமக்கு தெரியவரும். அதனால், தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ நடைமுறைப்படுத்துமாறு பள்ளிகள், கல்வித் துறைகள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம் மாணவர்கள் அந்த கொள்கையின் பலன்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.






பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வு உற்சாகம் அளிக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது மதிப்புமிக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்களிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொரு டிவிட்டர் பதிவில், என் இளம் நண்பர்களுடன் என்று குறிப்பிட்டிருந்தார்.