கேரளாவில் தெருநாய் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரியில் உள்ள பெருன்னா என்ற இடத்தில் தெருநாய் ஒன்று முன்னதாக தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து செய்திகளில் வெளியாகி வரும் நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


பெருன்னாவில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு அருகே இந்த நாய் கண்டெடுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நாய்க்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அப்பகுதி மக்கள் அதனை நல்லடக்கம் செய்தனர்.


இதேபோல், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கடுதுருத்தி அருகே உள்ள மூலக்குளம் பஞ்சாயத்தில் கிட்டத்தட்ட 12 தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த செய்தி முன்னதாக  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சம்பவம் முடிந்து ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.


இந்நிலையில் பெருன்னாவில் கொல்லப்பட்ட நாய் தொடர்ந்து பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்ததாக உள்ளூர்வாசிகள் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.


தெரு நாய்களின் தாக்குதல் தொடர்பான செய்திகள் நாடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. நாய்கடியால் சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. முன்னதாக இதேபோல் தெருநாய்களின் தாக்குதலில் இருந்து இரண்டு சிறுவர்கள் நூலிழையில்  தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 






கேரளாவில் நாய்க் கடி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில்கூட கேரளாவில், ரன்னியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது.


கேரளாவில் அதிகரித்த தெரு நாய்கள் தொல்லை


கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதாகவும் அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.





அந்த மனுவில், ''கேரளாவில் நாய்க் கடி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில்கூட கேரளாவில், ரன்னியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி, நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


வளர்ப்பு நாய் கடித்த வீடியோ


இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லிஃப்ட்டில் சிறுவனை வளர்ப்பு நாய் கடித்த வீடியோ காண்பிக்கப்பட்டது.


அப்போது, நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, ''நான் கூட நாய்களை அதிகம் விரும்புவேன். ஆனால் வளர்ப்பு நாய்கள், பொது மக்களில் யாரையாவது கடித்தால், அதை வளர்ப்போர்தான் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் ஏற்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? இந்த வழக்கில் வரும் 28-ம் தேதி அன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கிறோம்'' என்று தெரிவித்தார்.