தெருநாய்கள் தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக தான் ஓய்ந்திருந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 11 வயது சிறுமியை தெரு நாய்கள் இணைந்து துரத்திச் சென்ற சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள்:
தெருநாய்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்கள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக பெருமளவில் அதிகரித்து வந்தன. சமீப நாள்களாக இச்செய்திகள் சற்று ஓய்ந்த நிலையில், மீண்டும் தெரு நாய்கள் அச்சுறுத்தல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் உள்ள வைஷாலி எனும் பகுதியில் கடந்த வாரம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தன்னைத் துரத்தும் தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்ட சிறுமி தப்பிச்செல்கிறார். அப்போது, ஓடிச்சென்று காம்பவுண்ட் ஒன்றில் நுழையும் பெண்ணின் டீ சர்ட்டை விடாப்படியாக தாவிப் பிடித்து நாய் தாக்க முயற்சிக்கும்போது, நல்வாய்ப்பாக நூலிழையில் அப்பெண் தப்பிகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நாய்களின் தாக்குதலால் மோசமான பாதிப்புகள் தொடங்கி உயிரிழப்புகள் வரை சில மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பதிவாகி உள்ளன. கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாய்க்கடியால் 8க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து வெறிநாய்களை கட்டுப்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.
சி.சி.டி.வி. காட்சிகள்:
முன்னதாக கேரளாவில் தெருநாய்களின் தாக்குதலில் இருந்து இரண்டு சிறுவர்கள் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட பிட்புல் இன வளர்ப்பு நாய்கள் தாக்கிய சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் அதிகம் பதிவாகின. பிட்புல் இன நாய்கள் இந்தியாவின் பல இடங்களிலும் சட்டவிரோத விலங்கு சண்டை போட்டிகளுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனின் முகத்தை பிட்புல் இன நாய் கொடூரமாக கடித்துக் குதறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிட்புல் இன நாய்களை வளர்ப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க பீட்டா அமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
பிட் புல் நடுத்தர அளவிலான, குட்டையான பருமனான நாய், இது பயிற்சி பெறாதவர்களால் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இயல்புடையதாகக் கருதப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இயற்றப்பட்ட UK's Dangerous Dogs Act, 1991 சட்டத்தின்படி இந்த பிட்புல் நாய்கள் 'சண்டைக்காக வளர்க்கப்படும் நாய்களில்' ஒன்றாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.அதனால் பயிற்சி இல்லாதவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டத்தை மீறும் செயலாகும்.