ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை முடித்துக் கொண்டு தேர்தல் நடைபெறும் ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத்துக்கும் செல்லுமாறு காங்கிரஸ் எம்.பி.யும், கோவா முன்னாள் முதல்வருமான பிரான்சிஸ்கோ சர்தினா தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை அதாவது இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் பாஜக வெறுப்புணர்வை விதைத்து வைத்துள்ளதால் அதை வேரறுக்க இந்த ஒற்றுமை யாத்திரையை அவர் மேற்கொண்டுள்ளார்.


கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தென் தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை 40 நாட்களை நெருங்கி வருகிறது. 150 நாட்களில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கி.மீ தூரத்திற்கு இந்தப் பயணத்தை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். தற்போது அவர் கர்நாடகாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதுவரை அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.


இந்நிலையில், ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை முடித்துக் கொண்டு தேர்தல் நடைபெறும் ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத்துக்கும் செல்லுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரான்சிஸ்கோ சர்தினா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர், "பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸுக்கு மிகவும் முக்கியம். கட்சியை நாங்கள் கடைநிலையில் இருந்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம். ராகுல் காந்தி இதுவரை இந்த யாத்திரையில் சிறப்பான வேலையை செய்துள்ளார். ஆனால் இதை இப்போதைக்கு ராகுல் காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது" என்றார். ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும். ஆனால் அதே வேளையில் குஜராத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கவனம் செலுத்துமாறு ராகுல் காந்திக்கு மூத்த தலைவர் பிரான்சிஸ்கோ சர்தினா அறிவுறுத்தியுள்ளார்.


ராகுல் வாக்களிப்பு:
இதற்கிடையில்,  இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருவதால் அவர் எங்கு வாக்களிக்கபோகிறார் என்பது கேள்வியாக இருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் ராகுல் காந்தி வாக்களித்தார். முன்னதாக இதுகுறித்து ஜெய்ராம் ரமேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி நாளை எங்கு வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த ஊகமும் இருக்கக்கூடாது. அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளான சுமார் 40 பாரத யாத்ரிகளுடன் பெல்லாரி சங்கனக்கல்லுவில் உள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் முகாம் தளத்தில் வாக்களிப்பார்" என பதிவிட்டிருந்தார்.


அவர் கூறியிருந்ததுபடியே ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் பெல்லாரியின் சங்கனக்கல்லுவில் உள்ள நடமாடும் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை பயணம், தற்போது கர்நாடகாவை எட்டியுள்ளது. தற்போதுவரை, கிட்டத்தட்ட 1000 கிமீட்டருக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.