கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவில் நடந்த சைபர் முறைகேடு தொடர்பாக சீனாவை சேர்ந்த நபரை டெல்லி காவல்துறை இன்று கைது செய்துள்ளது. கைதான நபரின் பெயர் ஃபாங் செஞ்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு அவர் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.


தினம், தினம் பல்வேறு விதமான மோசடிகளும் முறைகேடுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக, ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதனால், ஆயிரம் ரூபாய் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள், தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.


Stock market பற்றி சொல்லி தருவதாக முறைகேடு:


இந்த நிலையில், டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ் அச்சுதன், சைபர் கிரைம் போர்ட்டலில் 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.


அவர் அளித்த புகாரில், "பங்குச்சந்தை குறித்து பயிற்சி எடுப்பதாகக் கூறி வகுப்பில் கலந்து கொள்ள வைத்தார்கள். பின்னர், முதலீடு செய்வதாகக் கூறி என்னை ஏமாற்றி பல முறை ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கினர். நான் அனுப்பிய பணம், பலரின் வங்கி கணக்குகளில் எனது பணம் மாற்றப்பட்டது. அந்த வங்கி கணக்குகள் எல்லாமே குற்றவாளிகளுக்கு சொந்தமானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "ஏப்ரல் மாதத்தில் 1.25 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றம் மூலம் மோசடி செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இருப்பதை காவல்துறை கண்டுபிடித்தனர். டெல்லி முண்ட்காவில் அமைந்துள்ள மகா லக்ஷ்மி டிரேடர்ஸ் பெயரில் வங்கி கணக்கு இருந்தது.


சீனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்:


குற்றத்துடன் தொடர்புடைய மொபைல் ஃபோனும் கண்டுபிடிக்கப்பட்டது. இது, சீனரான செஞ்சினை அடையாளம் காண காவல்துறைக்கு உதவியது. குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவில் வசித்து வந்துள்ளார்.


மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட தொலைபேசியில் செஞ்சினுக்கும் அவரது கூட்டாளிக்கும் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் கிடைத்தன. உரையாடலின்போது, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவரான செஞ்சின் தனது உதவியாளருக்கு அறிவுறுத்தினார்.


சைபர் கிரைம் போர்ட்டலில் குறைந்தது 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளன. 100 கோடி மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன" என தெரிவித்துள்ளது.