இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.






இலங்கை பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.


இலங்கையில் துறைமுகப் பணிகளை சீனா ஏற்று நடத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. சீனா துறைமுகம் கட்டவில்லை துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார்.


காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்," என்றார் இலங்கை அமைச்சர் வியாழேந்திரன்.


யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதனை இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார். இந்த சேவையானது ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.


இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து காரைக்கால் துறைமுகத்தை வந்தடைய சுமார் 3.30 மணிநேரமாகும். ஒரே நேரத்தில் 300 பயணிகளை அழைத்துவரக் கூடிய கப்பல்களை இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த பயணத்துக்கான கட்டணமாக 60 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட உள்ளது. அத்துடன் ஒரு பயணி சுமார் 100 கிலோ எடையுள்ள பொருட்கள் வரை எடுத்துச் செல்லவும் முடியுமாம்.

இப்பயணத்துக்கான குடிவரவு முனையம் உள்ளிட்ட பணிகளை அமைக்கவும் இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த காலங்களில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டது. ஆனால் போதுமான வரவேற்பு கிடைக்காத நிலையில் அப்போக்குவரத்து முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.