தென்மண்டல பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 19-ஆம் தேதி பதவியேற்க இருந்த நிலையில், அவரது நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
'சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன். எனவே அவரை அந்தப் பொறுப்பில் நியமிக்க தடைவிதிக்க வேண்டும்’ என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில், கிரிஜா வைத்தியநாதன் பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்றும், அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அனுபவம் பெற்றிருந்தாலும், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற பதவிகளில் பெற்ற அனுபவதின் அடிப்படையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கியதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தனர். கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த பதவிக்கு சட்டப்படி தேவைப்படும் தகுதியை அவர் பெற்றிருக்க வில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.