கொரோனா தொற்று உலகை அச்சுறுத்து வரும் நிலையில் தடுப்பூசியே கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் ஆயுதம் என அரசு பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் பெங்களூரு மாநகராட்சி உடன் இணைந்து மருத்துவர் ஸ்வேதா அகர்வால் என்பவர் தான் தொடங்கி உள்ள MY VACC என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் மூலம் அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணியாற்றும் இடத்திற்கு சென்று கோவிட் தடுப்பூசிகளை போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. MY VACC ஸ்டார்ட் அப் நிறுவனம் பெங்களூரு, மும்பை, புனே ஆகிய நகரங்களில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், பழ வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணிகளை மார்ச் மாதம் முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர்.



கடந்த வாரத்தில் பெங்களூரு நகரில் கட்ட வேலை நடைபெறும் இடத்திற்கே சென்று 450-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். MY VACC – அமைப்பின் இந்த நடவடிக்கைகளால் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை இழக்க வேண்டியதில்லை. தங்களது வேலையை முடித்து செல்வதற்கு முன் 35 நிமிடங்களை கட்டடத் தொழிலாளர்கள் செலவிட்டதே போதுமானதாக இருந்தது.


ஆன்லைன் முன்பதிவு செய்து தடுப்பூசி போட முடியாத மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் பயிற்சி பெற்ற ஊழியர்களை நகரத்தின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. அடித்தட்டு மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் இருந்தே தடுப்பூசி போடுவதற்கான தேதி மற்றும் நேரங்களை பெற்று பெங்களூரு மாநகராட்சி உதவியுடன் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.



பொருளாதாரரீதியாக அடித்தட்டில் உள்ள மக்களை குறி வைத்து MY VACC நிறுவனம் செயல்பட்டு வருவதால் தடுப்பூசி போடுவது மட்டுமின்றி தடுப்பூசி போட்டபின்னும் மக்களின் உடல்நிலையை கண்காணிக்கும் பணிகளையும் வயதான நபர்களுக்கு நேரடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகளை போடும் பணியையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.


பெங்களூரு, மும்பை, புனே என மூன்று நகரங்களையும் சேர்த்து இதுவரை 6000க்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்நிறுவனம் போட்டுள்ளது. தினமும் சராசரியாக 300 பேருக்கு தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது MY VACC நிறுவனம். இருப்பினும் தொடர்ந்து நிலவும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தடுப்பூசிகளை போடுவதில் சிக்கல் உள்ளதாக கூறும் மருத்துவர் ஸ்வேதா அகர்வால் தடுப்பூசி தட்டுப்பாடு தீர்ந்த உடன் 3000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். மேலும் அடித்தட்டு மக்களை சந்தித்து தடுப்பூசி செலுத்தி வரும் சேவையை ஹைதராபாத் மற்றும் சென்னை மாநகரங்களுக்கும் கொண்டு செல்ல MY VACC நிறுவனம் திட்டமிட்டுள்ளது.