எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. அது குறித்த முழு விவரங்களை காணலாம்.

செயற்கைக்கோள் இணை சேவைக்கு உரிமம் பெற்ற ஸ்டார்லிங்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து முக்கிய உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போன்ற விண்ணப்பத்தை அளித்திருந்த யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியுள்ளது. ஆனாலும், இந்த உரிமம் தொடர்பான விவரங்கள் குறித்து, ஸ்டார்லிங்க் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக ரீதியாக செயல்படுவதற்கான உரிமத்திற்காக ஸ்டார்லிங்க் காத்திருக்கிறது. ஆனால், தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டன. அதே வேளையில், அமேசானின் குய்பர் இன்னும் அதன் இந்திய உரிமத்திற்காக காத்திருக்கிறது.

செயற்கைக்கோள் சேவைகளுக்கு எவ்வாறு அலைக்கற்றையை வழங்குவது என்பது தொடர்பாக, மஸ்க்கின் நிறுவனம், சில மாதங்களாக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோவுடன் மோதல் போக்கில் இருந்துவந்தது. அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாமல், ஒதுக்கீடு முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில், இந்திய அரசாங்கம் மஸ்க்கின் பக்கம் சாய்ந்துள்ளது.

ஏற்கனவே ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் போட்ட ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள்

உலக அளவில் மிகப்பெரிய ஒரு மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களாக விளங்கி வரும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளன.

தனது வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமான, ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏர்டெல் வாயிலாக வழங்கப்படும் ஸ்டார்லிங்க சேவையால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமும், அதன் வாடிக்கையாளர்களுக்கு, லோ எர்த் ஆர்பிட் (Low Earth Orbit) செயற்கைக்கோளை வைத்து உலகம் முழுக்க அதிவேக இணைய சேவையை வழங்கிவரும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் இணைப்பினால், இந்தியாவின் உள் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் தடையில்லாத அதிவேக இணைய சேவை கிடைக்கும். ஸ்டார்லிங்க், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபருடன் இணைந்து விரைவாகவும், குறைந்த விலையிலும் நெட்வொர்க் சேவைகளை வழங்க உள்ளது.