இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசு முறை பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வரும் ரணில் விக்ரமசிங்க பல்வேறு விஷ்யங்களை குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தால அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவே ஆகும். 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம் தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது இலங்கை அதிபருடன் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வது, விசை படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே மீனவர்களில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இலங்கை அதிபர் மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை தருவதால், மீனவர்கள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதாரம் திவாலான நிலையில், அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க பொருளாதார அவசர நிலையை அறிவித்தார். அப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதியுதவி பெற்றது. தற்போது பொருளாதாரம் சற்று முன்னேறி உள்ள நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், இந்தியாவுடனான நல்லுறவுக்கு மேம்படுத்தி முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொது பணமாக பயன்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.