சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை அரங்கேறி வரும் நிலையில், விமானப் பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் மீண்டும் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணிப்பெண்ணிடம் அத்துமீறிய பயணி:
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டதால் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், விமான குழுவினரும் பயணிகளும் ஒரு ஆண் பயணியிடம் வாக்குவாதம் மேற்கொள்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று, டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரையில் SG-8133 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கப்படவிருந்தது. விமானம் டெல்லியில் இருந்து புறப்படவிருந்த சமயத்தில், விமான குழுவினருக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் தகாத முறையில் பயணி ஒருவர் மோசமாக நடந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து விமான குழுவினர் தகவல் தெரிவித்தனர். மேலே குறிப்பிடப்பட்ட அந்த பயணியும் அவருடன் வந்தவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட பயணி:
விமான குழுவில் இருந்து ஒருவரிடம் அந்த பயணி தகாத முறையில் நடந்து கொண்டதாக விமான குழுவினர் குற்றம் சாட்டினர். ஆனால், விமானத்தில் கூட்டநெரிசல் காரணமாக இது தற்செயலாக நடந்ததாக சக பயணிகள் தெளிவுப்படுத்தினர்.
இதை தொடர்ந்து, அந்த பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் அளித்தார். இருந்தபோதிலும், பிரச்னையை தவிர்க்க அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.
தொடரும் அசம்பாவிதம்:
கடந்த ஜனவரி 5ஆம் தேதி, டெல்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற கோ பர்ஸ்ட் விமானத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தனக்கு அருகே உட்காரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி, மற்றொரு விமானப் பணிப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கோவா மோபாவில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு, அந்த நபர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மோபாவில் புதிய விமானம் திறக்கப்பட்ட அதே நாளில், இச்சம்பவம் அரங்கேறயது.
ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கோ பர்ஸ்ட் விமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.