பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் நினைவாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டியுள்ளார். பராக்ரம் திவாஸ் விழாவில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் தீவுகள்:
முன்னதாக, ராஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவில் கட்டப்பட உள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார்.
அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 1947ஆம் ஆண்டு, நவம்பர் 3ஆம் தேதி, ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களுடன் போரிட்டு தனது உயிரை இழந்தவர் மேஜர் சோம்நாத் சர்மா.
21 வீரர்களின் பெயர்:
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், "இந்த தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேஜர் சோம்நாத் சர்மா; சுபேதார் மற்றும் ஹானி கேப்டன் (அப்போது லான்ஸ் நாயக்) கரம் சிங், எம்எம்;
2வது லெப்டினன்ட் ராம ரகோபா ரானே; நாயக் ஜதுநாத் சிங்; கம்பெனி ஹவில்தார் மேஜர் பிரு சிங்; கேப்டன் ஜிஎஸ் சலாரியா; லெப்டினன்ட் கர்னல் (அப்போது மேஜர்) தன் சிங் தாபா; சுபேதார் ஜோகிந்தர் சிங்; மேஜர் ஷைத்தான் சிங்; CQMH அப்துல் ஹமீத்; லெப்டினன்ட் கர்னல் அர்தேஷிர் புர்சோர்ஜி தாராபூர்;
லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா; மேஜர் ஹோஷியார் சிங்; 2வது லெப்டினன்ட் அருண் கெத்ரபால்; பறக்கும் அதிகாரி நிர்மல்ஜித் சிங் செகோன்; மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன்; நைப் சுபேதார் பானா சிங்; கேப்டன் விக்ரம் பத்ரா; லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே
சுபேதார் மேஜர் (அப்போது ரைபிள்மேன்) சஞ்சய் குமார்; மற்றும் சுபேதார் மேஜர் ஓய்வு (மாண்புமிகு கேப்டன்) கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ் ஆகிய பெயர்கள் தீவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நிஜ ஹீரோக்கள்:
நாட்டின் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதற்கு பிரதமர் அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த உணர்வோடு, 21 பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரை சூட்ட இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது"
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியை பராக்கிரம் திவாஸ் என்று மத்திய அரசு அறிவித்தது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் வைத்து, நேதாஜியின் நினைவை போற்றும் வகையில், 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சென்ற போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவுகளும் ஷஹீத் த்வீப் மற்றும் ஸ்வராஜ் த்வீப் என்று பெயர் மாற்றப்பட்டது.