டெல்லியில் இருந்து ஜபல்பூர் வரை கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமான ஒன்று சுமார் 5 ஆயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்திற்குள் புகை தென்பட்டதால் மீண்டும் டெல்லிக்குத் திரும்பியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தரப்பில் அனைத்து பயணிகளும் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகை தென்பட்டதும் பயணிகள் செய்தித்தாள்கள், ஏர்லைன் புக்லெட்கள் முதலானவற்றைப் பயன்படுத்தி அதனை விரட்ட முயலும் காட்சியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளது. 


தொடர்ந்து இதே போன்ற புகார்கள் காரணமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பில் கவனம் காட்டுகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஜூன் 19 அன்று, பாட்னாவில் இருந்து டெல்லி கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று பறவையை இடித்ததால் தீ பிடித்து, மீண்டும் பாட்னா விமான நிலையத்திற்கே திரும்பியது குறிப்பிடத்தக்கது. 







தற்போது டெல்லி - ஜபல்பூர் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த சௌரப் சப்ரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விமானத்தில் என்ன நடந்தது என்பதைப் பதிவாகவும், அதன் படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், `இன்று காலை இந்த நிகழ்வை எதிர்கொண்டேன்.. ஸ்பைஸ்ஜெட் பாதுகாப்பானது இல்லை எனத் தோன்றுகிறது. பயணிகள் அச்சப்படத் தொடங்கியதும், மீண்டும் டெல்லிக்கு விமானம் திரும்பியது. மேலும், விமானம் தீப்பிடித்தது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.. ஆனால் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் மாற்று திட்டம் எதுவும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.