திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரியாசுல் ஹக் என்ற நபர், தனது முதலாமாண்டு திருமண நாளில் தனது மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக வழங்கிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரியாசுல் ஹக் தனது மனைவி சபீனா யாஸ்மினுக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி சமூக வலைத்தளங்களில் ஏகே 47 துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். இதை பார்த்த ஒரு சிலர் கடுமையாக இதுகுறித்து விமர்சிக்க தொடங்கினர். 


இதனால், ரியாசுல் தனது சமூக ஊடக தளத்திலிருந்து பதிவை உடனடியாக நீக்கினார், இருப்பினும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ‘ இது தலிபான் ஆட்சியை ஊக்குவிப்பதற்கான செயல்” என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். 


இதுகுறித்து விளக்கமளித்த ரியாசுல், ” எனது மனைவி வைத்திருந்தது பொம்மை துப்பாக்கிதான். என் மனைவி பொம்மை துப்பாக்கி வைத்திருந்ததால், சட்ட விரோதமாக எந்த நடவடிக்கையு எடுக்கவில்லை. இதன் காரணமாக என் மீதான குற்றச்சாட்டு போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


ரியாசுல், ஹக் துணை சபாநாயகரும் ராம்பூர்ஹாட் எம்எல்ஏவுமான ஆஷிஷ் பந்தோபாத்யாயின் நெருங்கிய உதவியாளர் என்று நம்பப்படுகிறது. அவர் ஒருமுறை டிஎம்சியின் சிறுபான்மை பிரிவின் ராம்பூர்ஹாட்-1 தொகுதியின் தலைவராக இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், தன் பதவியை ராஜினாமா செய்தார்.


அதே நேரத்தில், ரியாசுல் துப்பாக்கியை வாங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.