சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும், இந்து அமைப்பினரும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். உத்திர பிரதேச சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி விலை நிர்ணயம் செய்தும், அவரது புகைப்படத்தை தீ வைத்து கொளுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து இன்றைய முரசொலி நாளிதழில் திமுக தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டு எல்லைக்குள். தமிழ் மக்களின் எதிர்கால நம்பிக்கையாக உருவாகி வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று அகில இந்திய அளவில் வியந்து நோக்கும் ஒரு இளந் தலைவனாக உருவெடுத்துள்ளார்.
அகில இந்திய ஏடுகள் அனைத்திலும் முதல் பக்க, முக்கிய செய்தியாக வந்துள்ள பெயர் உதயநிதி ஸ்டாலினுடையது! தமிழ்நாடு ஊடகங்கள் மட்டுமின்றி அகில இந்திய ஊடகங்கலிலும் இன்று உதயநிதியே முக்கியத்துவம் பெற்று நிற்கிறார். காவி உடையில் உள்ள ஒரு கபட வேடதாரி காட்டுமிராண்டி போல ஒரு கையிலே உதயநிதி படத்தையும் மற்றொரு கையில் வாள் ஒன்றையும் சுமந்து வந்து நடுத் தெருவில் நான்கு பேர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் குத்தி கிழித்தெறிகிறார்!
இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் தருவதாக காவி உடை கயவன் நிர்ணயிக்கிறான்! இந்த காவி உடை கபட வேடதாரிகளுக்கு இந்த அளவு தைரியம் வரக் காரணம் இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் "தங்களது பின்னால் இருக்கிறார்" என்ற எண்ணமே!
ஏறத்தாழ கடந்த 100 ஆண்டு காலமாக திராவிட இயக்கம் தொடர்ந்து சனாதன தர்மத்தையும் அதன் அடிப்படைக் கொள்கையான வர்ணாசிரமத்தையும் எதிர்த்துத்தான் போர்குரல் கொடுத்து வந்துள்ளது.
இந்த சனாதன தர்மமும், வர்ணாசிரமமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர, ஏனைய அனைத்து இந்து சமுதாய மக்களையும் சாதியால் பிரித்து முன்னேறிட விடாது தடுத்திட அமைக்கப்பட்ட இரும்புத்திரை! சனாதனமும், வர்ணாசிரமமும் வேறு வேறல்ல: "சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே. வர்ணாசிரமம்தான்-என காஞ்சி சங்கராச் சாரியாரே அவர் எழுதியுள்ள "தெய்வத்தின் குரலில்" தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று பேசியதில் என்ன தவறு? இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் ஓர் இடத்தில் இது குறித்து விமர்சிக்கிறார்; பி.ஜே.பி.யின். தலைவர் நட்டா வேறு ஒரு மாநிலத்தில் இந்தப் பேச்சுக்குத்தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார்; இந்தியா முழுதும் ஒரே நேரத்தில் பல மாநிலங்களில்; உதயநிதி ஸ்டாலின் பேசு பொருளாகிறார்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய அரங்கம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் உள்ள சிறிய அரங்கம்! அங்கு சனாதன தர்மத்திற்கு எதிராக பலர் பேசினர்; பத்து வயது பாலகனாக மேடையிலே தோன்றி திராவிட இயக் கத்தின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்து கொண்டிருப்பவரும், திராவிட இயக்கக் கொள்கைகளை நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து விரித்துரைத்திடும் ஆசிரியராக விளங்கிடும் பெருமதிப்பிற்குரிய வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் போன்றோர் பங்கேற்ற அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு நாட்டின் உள்துறை அமைச்சர் தொடங்கி உதவாக்கரை பி.ஜே.பி. தலைவர் வரை விமர்சிக்கிறார்கள் என்றால் என்ன காரணம்?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்பதை - ஏதோ சனாதனவாதிகளை ஒழிப்போம் என்று கூறியதுபோல திரித்து 'இனப்படு கொலை* (GENOCIDE) என்றெல்லாம் துரும்பைத் தூணாக்கியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் உடனடியாக 'சுய- மோட்டோ வழக்காக விசாரிக்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து பி.ஜே.பி. குரல் கொடுக்கிறது. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதியிலிருந்து 19-ந் தேதி வரை ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சாட் (Dharma Sansad) எனும் இந்து அமைப்பின் கூட்டத்தில் “இந்துக்களை பாதுகாக்க முஸ்லீம்களை இனப்படு கொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாக பேசப்பட்டது! இது போன்ற மிருக வெறிப்பேச்சுக்களை இந்து சாமியார்கள் என்ற போர்வையில் இருந்த கொலை வெறிக்கூட்டம் பேசியது மட்டுமின்றி அதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டது.
அரசியல் ஆதாயம் தேட, மக்களின் மனதில் மதத் துவேஷங்களை உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று எண்ணி செயல்படும் இந்தக் கூட்டத்துக்கு பல நேரங்களில் மரண அடி தந்துள்ளனர் மக்கள்!
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த தேர்தலின் போது பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை திரித்து, பஜ்ரங்கி என்றால் ஆஞ்சநேயர்; அந்த ஆஞ்சநேயர் உதித்த ஸ்தலம் கர்நாடகம்; அந்த ஆஞ்சநேயரைத் தடை செய்யப் போகிறார்களாம்: ராம, ஆஞ்சநேய பக்தர்களே இந்த இந்துமத விரோதிகளுக்கு ஓட்டளிக்கலாமா?என்று மோடி தெருத்தெருவாக சென்று ஒரு இட்டு கட்டிய கதையைக் கூறி பிரச்சாரம் செய்தார்!
தி.மு.க.வைப் பற்றி முழுவதுமாக அறிய வில்லை! தி.மு.க.விடம் பூச்சாண்டி காட்டி பார்க்கின்றனர். தென்றல் அல்ல நாங்கள்; புயல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.