தென்கொரியாவை சேர்ந்த யூடியூபரான ஹியோஜியோங் பார்க், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கலாச்சாரம், பண்பாடு தொடர்பான வீடியோக்களை, தனது சேனலில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா வந்துள்ள ஹியோஜியோங் பார்க் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மும்பையில் தங்கியிருந்து பல்வேறு, சுற்றுலா தளங்களை பார்த்து ரசித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையின் கார் பகுதியில் பரபரப்பான சாலையில் நடந்து சென்றவாறே, தனது யூடியூப் சேனலில் லைவ் ஸ்டிரீமிங் செய்துள்ளார். மும்பை மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை தனது ஃபாலோவர்ஸ்களுக்கு, விளக்கியவாறு அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், ஹியோஜியோங்கின் அருகே சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு பேச தொடங்கினர்.
திடீரென அவர்களில் ஒருவர் பெண்ணின் கையை பிடித்து ‛வாங்க பைக்கில் செல்லலாம்' என இழுத்தார். இதை சிறிதும் எதிர்பாராத ஹியோஜியோங், எங்கே அழைத்துச் செல்கிறாய் என கேட்க. நாம் பைக்கிள் செல்லாம் என இளைஞர்கள் கூறியுள்ளனர். இதை அந்த பெண் மறுத்துள்ளார்.
ஆனாலும் அவரின் கையை விடாத இளைஞர் பைக்கில் வரும்படி தொடர்ந்து அழைப்பு விடுத்ததோடு, திடீரென ஹியோஜியோங்கின் தோளில் கை வைத்து முத்தமிட முயன்றார். சுதாரித்து கொண்ட பெண் இளைஞரை தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார். அந்த பதற்றத்திலேயே அவர் நடந்து செல்ல இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள், ‛பைக்கில் வாங்க, வீட்டுக்கு போகலாம் எனக் கூறியுள்ளனர். எனது வீடு இங்கு தான் உள்ளது. நான் சென்று விடுகிறேன் என கூறிவிட்டு, ஹியோஜியோங் தனது வசிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடிக்கொண்டிருந்த பரபரப்பான சாலையில் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக, மியோச்சி என்ற பெயரிலான தனது டிவிட்டர் கணக்கில் ஹியோஜியோங் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, தென் கொரிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட இரு இளைஞர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள ஹியோஜியோங், வேறொரு நாட்டிற்கு சென்றபோதும் இதுபோன்ற சூழலை தான் எதிர்கொண்டேன். ஆனால் அங்கு தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. அதேநேரம், இந்தியாவில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளேன் என ஹியோஜியோங் கூறியுள்ளார்.