தென்னிந்தியா மூன்று பக்கமும் மூன்று கடல்களை கொண்டுள்ள காரணத்தால், பல அழகான கடற்கரைகளுக்கு தாயகமாக உள்ளது. அதன் அமைதியான கடற்கரை பனை மரங்கள், தெளிவான நீர் மற்றும் தங்கம்போல மணலால் நிறைந்துள்ளது. கேரளாவின் அமைதியான கடற்கரைகள் முதல் ஆந்திரப் பிரதேசத்தின் நிலத்தின் முனைகள் வரை, கடலை விரும்புபவர்களுக்கு பக்கெட் லிஸ்டில் இருக்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் விடுமுறையை விரும்பினாலும் அல்லது நண்பர்களுடன் சிலிர்ப்பான சாகசத்தை விரும்பினாலும், தென்னிந்தியாவில் உள்ள கடற்கரை இடங்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். உங்கள் அடுத்த பயணத்திற்கு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இடங்கள் இதோ
- மராரி கடற்கரை, கேரளா
மராரி கடற்கரை என்பது கேரளாவின் ஆலப்புழாவில் அமைந்துள்ள ஒரு சூப்பர் ஸ்பாட். இந்த கடற்கரை ஒப்பீட்டளவில் பலரும் சென்று காணாமல் இருக்கும் இடம். இந்த கடற்கரை பசுமையான, தென்னை மரங்களுடன் அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. இது பல ரிசார்ட்டுகள் மற்றும் ஸ்பாக்களின் தாயகமாகவும் உள்ளது. மேலும் இது ஓய்வெடுக்கும் விடுமுறைக்கு சரியான இடமாக அமைகிறது.
- ராதாநகர் கடற்கரை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான ஹேவ்லாக் தீவு, ராதாநகர் கடற்கரையின் தாயகமாகும். இது உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றாகும், அதன் டர்க்கைஸ் நீர், மென்மையான வெள்ளை மணல் மற்றும் பசுமை காண்பதற்கு அவ்வளவு புதிதாக இருக்கும். கடற்கரை நீச்சல், சூரிய குளியல் செய்வதற்கும் ஏற்றது.
- கோவளம் கடற்கரை, திருவனந்தபுரம்
இது கேளம்பாக்கம் அருகில் உள்ள கோவளம் இல்லை, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கோவளம். இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த அழகிய கடற்கரையானது தெளிவான நீர், வெள்ளை மணல் மற்றும் நிதானமான சூழலைக் கொண்டுள்ளது. கடற்கரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதில் தெற்கு கடற்கரை மிகவும் பிரபலமானது. இந்த கடற்கரை ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் யோகா வகுப்புகளுக்கான மையமாகவும் உள்ளது.
- எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
எலியட்ஸ் தமிழ்நாட்டின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றாகும்; சென்னைவாசிகள் இதை பெசன்ட் நகர் கடற்கரை அல்லது பெஸ்ஸி என்று அன்புடன் குறிப்பிடுகிறார்கள். உங்கள் கால்விரல்களை வெதுவெதுப்பான மணலில் நனைத்து, வியாபாரிகள் வழங்கும் கடல் உணவு சிற்றுண்டிகளை உண்ணும்போது உங்கள் உடலும் மனதும் நிறைகிறது. அங்கு வேகமாக அலை அடிப்பதால், நீர் விளையாட்டு ஆபத்து, ஆனால் கடற்கரையில் குதிரை சவாரி, பலூன் ஷூட்டிங், வளையம் எறிதல், கிளி ஜோசியம், எலி ஜோசியம் போன்ற பிற செயல்பாடுகளை அனுபவிக்கலாம்.
- வர்கலா கடற்கரை, கேரளா
வர்கலா கடற்கரை என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஒரு குன்றில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இந்த கடற்கரையானது உயரமான பாறைகளால் சூழப்பட்டுள்ளது, இது அரபிக்கடலின் அற்புதமான காட்சியை வழங்குகிறது. கடற்கரை அதன் இயற்கை கனிம நீரூற்றுகள் மற்றும் ஆயுர்வேத ஸ்பாக்களுக்கும் பெயர் பெற்றது.
- பட்டர்ஃபிளை பீச், கோவா
கடற்கரையில் உள்ள மரங்களில் அதிக எண்ணிக்கையில் பட்டாம்பூச்சிகள் பறப்பதால் இந்த கடற்கரைக்கு அதன் பெயர் வந்தது. மேலும், கடற்கரை ஒரு விசித்திரமான பட்டாம்பூச்சி வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரை ஒரு சிறிய குகை போன்ற வடிவத்தில் உள்ளது மற்றும் உயரமான காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த கடற்கரை மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட மற்றும் மிகவும் தொலைதூர கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரைக்கு செல்ல படகு மூலம் செல்லலாம். அதன் பிறகு, கார்கள் அங்கு பயணிக்க முடியாததால், வெகுதூரம் நடந்துதான் சென்று இதனை ரசிக்க முடியும்.
- மகாபலிபுரம் கடற்கரை, தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அமைந்துள்ளது இந்த கடற்கரை பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் மற்றும் சிற்பங்களுக்கு பெயர் போனது. சர்ஃபிங் மற்றும் பிற நீர் நடவடிக்கைகளும் கரையில் மிகவும் பிரபலமாக உள்ளன. கடற்கரை குடிசைகள் மற்றும் கஃபேக்களால் நிரம்பிய இடம் இது, இங்கு கிடைக்கும் கடல் உணவு வகைகள் மிகவும் பிரபலம். பிரத்யேக மசாலா ஒன்றின் மூலம் செய்யப்படும் கடல் உணவுகளுக்கு ரசிகர்கள் அதிகம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடைகளுக்கு மட்டுமே தெரிந்த அந்த சீக்ரட் ரெசிபி தற்போது மகாபலிபுரத்தின் பல ஹோட்டல்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
- கன்னியாகுமரி கடற்கரை, கன்னியாகுமரி
இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை, வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று முக்கிய கடலின் சந்திப்பு இடமாகும். அதிகம் வருகை தராத இந்த சுற்றுலாத் தலமானது செழுமையுடன் கூடியது. கொந்தளிப்பான அலைகள் உங்களை கடலுக்குள் நுழைவதைத் தடுக்கும் என்றாலும், இதன் சிறப்பே அங்கு தெரியும் சூரிய அஸ்தமன காட்சிதான். மேகங்கள் குறைவான காலங்களில் சூரியன் கடலுக்குள் மூழ்குவது போன்ற அற்புதமான காட்சி அனுபவம் கிடைக்கும்.
தென்னிந்தியா இயற்கை அழகு, கலாச்சாரம் மற்றும் சாகசங்களின் தனித்துவமான கலவையை வழங்கும் அழகிய கடற்கரைகளின் பொக்கிஷமாகும். இங்குள்ள மனிதர்களும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எண்ணத்தை கொண்டு எல்லோரையும் அரவணைத்து வாழ்பவர்கள். எனவே, தென்னிந்தியாவின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளை சுற்றிப்பார்க்க, இப்போதே திட்டமிடுங்கள்!