நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தியுடன் இன்று மதியம் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இசட் பிளஸ் பாதுகாப்புடன் அவர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சமீபத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி முகக்கவசம் அணிந்தவாறு அலுவலக்திற்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கரிஸ் கட்சியினர் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அமலாகத்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "எங்களிடமிருந்து பாஜகவிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள்தான் காங்கிரஸ் கட்சி என பிரதமர் நினைத்து கொண்டிருப்பதை அவர் மறுந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி என்றால் என்ன, காந்தி குடும்பம் என்றால் யார் என்பதை புரிந்து கொள்ள் அவர்கள் பலமுறை மறு பிறவி எடுக்க வேண்டும்" என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களாலும் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் குடும்பத்தின் அமைப்பாக காங்கிரஸ் மாறிவிட்டது, இப்போது அதன் சொத்துக்களும் குடும்பத்தாரால் நிர்வாகம் செய்யப்படுகின்றன. பிணையில் தான் இருவரும் வெளியே இருக்கின்றனர்" என்றார்.
இது தொடர்பாக, மத்திய அரசை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 13 எதிர்கட்சிகள் கட்சிகள் கலந்து கொண்டன. மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விமர்சித்து எதிர்கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்