காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே, அரசியல் பணிகளில் இருந்து சோனியா காந்தி கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். பின்னர், ராகுல் காந்தி அந்த பதவி வழங்கப்பட்டது.
ஆனால், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி, அந்த பதவி மீண்டும் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அந்த பதவி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கூட சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. தற்போது, ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி உள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் தேசிய ஆலோசனை குழு தலைவராக பொறுப்பு வகித்தார்.
மத்திய அரசு வகிக்கும் திட்டங்களையும் இலக்குகளையும் அமல்படுத்துவதற்காகவும் கண்காணிக்கவும் தேசிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில், பல்வேறு துறை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 29ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிசம்பர் 26ஆம் தேதி, மதியம் 12 மணி அளவில் மருத்துவமனையின் தனியார் வார்டில் அவர் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வந்தன.
அன்று மதியமே, அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. வயிற்றில் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.