ஒடிசாவில் தினசரி கூலித் தொழிலாளியின் மகனும், காய்கறி விற்பனையாளரின் மகளும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கஞ்சம் மாவட்டத்தின் பொலசரா பிளாக்கில் வசிக்கும் சாந்தனு தலாய், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) அகில இந்திய அளவில் 19,678 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
கஜபதி மாவட்டத்தில் உள்ள அடவா கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரிதா பாண்டா 720 மதிப்பெண்களுக்கு 622 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 11,895 ரேங்க் பெற்றுள்ளார். அவரது தந்தை ஆடவா சந்தையில் காய்கறிகளை விற்று வருகிறார்.
இருவரும் கடந்த ஆண்டு முதல் வாய்ப்பில் தேர்ச்சி பெற முடியாததால், இரண்டாவது வாய்ப்பில் தேர்ச்சி பெற்றனர். இதற்காக கடுமையாக உழைத்ததாகவும், தனது மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவதாகவும் பாண்டா கூறியுள்ளார். கட்டாக் அல்லது பெர்ஹாம்பூரில் உள்ள முதன்மையான அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாண்டா.
தினசரி கூலித் தொழிலாளியின் மகனான தலாய், மாநிலத்தில் எதாவது ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறார். "பணப்பிரச்சனைகள் இருந்தபோதிலும், நான் அவரது படிப்பை புறக்கணிக்கவில்லை" என்று அவரது தந்தை நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
தலாய், கல்வியாளர் சுதிர் ரௌத் நடத்தும் ஆர்யபட்டா என்ற தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக இலவசமாகப் பயிற்சி எடுத்து வந்தார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் தனது மகளின் படிப்பை புறக்கணிக்கவில்லை என்றும் பாண்டாவின் தந்தை கூறியுள்ளார்.
"அவர் ஒரு டாக்டராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதன்படி நான் அவளுக்கு உதவி செய்தேன்" என்று அவர் கூறினார்.
ரௌத், தனது நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஏழை மாணவர்கள் சிலருக்கு இலவச பயிற்சி அளித்து அவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு நிதியை ஏற்பாடு செய்து தருவதாக கூறி உள்ளார்.