இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பது நிலவு சூரியனின் பெரும்பாலான பகுதி மறைத்து நிலவின் விளிம்பில் சூரிய ஒளி வளையம் போன்று தோன்றும். அந்த சமயத்தில் பூமியின் சில பகுதிகளில் வளைய வடிவில் நிழல் தோன்றும். ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது பகுதி, முழு மற்றும் வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும்.
இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்த ஆண்டு 4 கிரகணங்கள் தோன்றும், 2 சந்திர கிரகணம் 2 சூரிய கிரகணம். இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி தோன்றியது. அதேபோல் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றுகிறது. ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பிக்கும். இதன் உச்சம் நள்ளிரவு 12 மணியளவில் நிகழும். அதிகாலை 1.25 மிணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது.
இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தென்படாது என்றாலும், இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
ஒவ்வொரு கிரகணத்தின்போது கோயில் நடை மூடப்படும். இதனை சூதக் காலம் என அழைப்பார்கள். இந்தியாவில் கிரகணம் தென்படாது என்பதால் சூதக் காலமும் கணக்கில் வராது.
சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?
தொலைநோக்கியைப் பயன்படுத்தி பார்க்கலாம். சூரிய கிரகணத்தைக் காண, பிளாக்சி பாலிமர், அலுமினிஸ்டு மைலார் போன்ற கண் வடிகட்டிகள் அல்லது வெல்டிங் கிளாஸைப் பயன்படுத்தி காணலாம். இருப்பினும், கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களில் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.