இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு பொழிந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வெயிலும் பனியும்:
இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கோடை வெயில் நெருங்கி வரும் சூழலில், இந்திய நாட்டின் வடக்கு பகுதிகளில் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, இமயமலை தொடரின் அடிவாரங்களில் உள்ள மாநிலங்களில் பனிப்பொழிவு பொழிந்து வருவதையும் காண முடிகிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களில் கடுமையான மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என இந்தியா வானிலை மையம் தெரிவித்தது.
இமாச்சல் பனிப்பொழிவு:
இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அடல் சுரங்கப்பாதயின் அருகே பனிப்பொழியும் வீடியோ ஒன்றை, அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
ஒரே நாடு என்ற போதிலும், பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த போதிலும், சில இடங்களில் பனி பொழிவது, பல்வேறு கலாச்சாரங்கள் மட்டுமின்றி, பல்வேறு வானிலையும் உள்ள வண்ணமயமான இந்தியா என்பதை உணர்த்துகிறது.
வானிலை மையம் எச்சரிக்கை:
ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கையைக் குறிக்கும் வகையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியுடன் மேற்கூறிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் என்பதால், மார்ச் முதல் மே வரையிலான கோடை காலம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.