காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதி அமேதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த அமேதி:


குறிப்பாக, நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டுதான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்கள். குறிப்பாக ராகுல் காந்தி, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்பியாக பதவி வகித்தார். 


இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2019ஆம் ஆண்டு, அமேதி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாட்டில் வெற்றிபெற்றபோதிலும் அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் (தற்போது மத்திய அமைச்சர்) தோல்வி அடைந்தார். இது, காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.


இந்த நிலையில், அமேதியில் ராகுல் காந்தியின் தோல்விக்கு அவரது ஆணவமே காரணம் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் அரசியல் எஜமானராக அவர் இருக்கிறார். நான் பாஜகவின் கடைநிலை தொண்டன். 


"காங்கிரஸ் கட்சியின் எஜமானர்"


அரசியல் எஜமானராக இருப்பதற்கும் தொண்டனாக இருப்பதற்கும் மிகப்பெரிய அரசியல் வேறுபாடு உள்ளது. அமேதி தோல்விக்கு அவரது ஆணவமே காரணம்" என்றார்.


மலையாள மனோரமா செய்தி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசிய அவர், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள அதே கூட்டணிக்கு எதிராக தான் கடந்த 2019ஆம் ஆண்டு, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் நான் எம்.பி.யாக இருக்கும் அமேதி மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஐந்து சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது அந்த ஆணவத்தால் தான் என நினைக்கிறேன். நான்கு தொகுதிகளில் அவர்கள் டெபாசிட் இழந்தனர்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டில், அமேதியில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. 40 ஆண்டுகளாக, ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் அந்த தொகுதி இருந்தது. இப்போது அதன் வாக்குகள் 1.2 லட்சமாக குறைந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவில்லை. அவர்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் போட்டியிட்டனர். எனவே தேசிய அளவில் இன்று நீங்கள் பார்க்கும் கூட்டணி 2019இல் அமேதியில் நான் தோற்கடித்த கூட்டணி.


நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது, அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும். ஒரு அரசியல் தலைவருக்கு சவால் விடுக்க பல அரசியல் சக்திகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது" என்றார்.