Watch Video: அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட திப்ருகர்-கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது.


விபத்து நேர்ந்தது எப்படி?


இந்தியாவிலேயே மிகவும் நீளமான ரயில் சேவை என்பது கன்னியாகுமரி - திப்ருகர் ரயில் சேவை தான். இந்த ரயில் 4189 கி.மீ நீளம் கொண்டது. கன்னியாகுமரியில் இருந்து அசாமுக்கும், அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கும் இயக்கப்படும் இந்த ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் இன்று அதிகாலை புறப்பட்டது.  கன்னியாகுமரி நோக்கி வந்த எஸ்க்பிரஸ் ரயில், ஒடிசாவின் பிரம்மப்புர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, குறிப்பிட்ட சில பெட்டிகளில் திடீரென புகை கிளம்பியது.






இதனால் அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். உடனே ரயில் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை உடனே நிறுத்தினார்.   புகை கிளம்பியதால் அச்சத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கியுள்ளனர்.  உடனே இதுகுறித்து ரயில்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். 




காரணம் என்ன?

 

இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில்,  ”ரயிலின் பிரேக் பகுதியில் கோணிப் பை ஒன்று சிக்கியுள்ளது. இதனால் ரயில் செல்லும்போது ஏற்பட்ட உராய்வில் புகை வந்துள்ளது. பின்னர், பிரேக் பகுதி பரிசோதிக்கப்பட்டு, அரை மணி நேரம் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டது. புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக”  கூறினர்.

 

அச்சத்தில் மக்கள்:


அண்மையில் ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி நேர்ந்த விபத்தில், 290-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த சில தசாப்தங்களில் நேர்ந்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக அந்த விபத்து கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவித்தொகை அறிவித்தன. உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விபத்தால் நேர்ந்த அச்சமே பொதுமக்களிடையே இன்னும் ஒழியவில்லை. இந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்துகள் பொதுமக்களிடையே ரயில் பயணம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே, ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற தேவையான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.