படுகொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் அகற்றப்பட்டதாக முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்து மூஸ்வாலா, மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அரசியலில் பிரவேசமான சில மாதங்களிலேயே அகால மரணமடைந்துள்ளார்.






அவரது மறைவு குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் சண்டிகர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைத்தும் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.


இந்தச் சூழலில், சித்து மூஸ்வாலின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூஸா எனும் கிராமத்தில் உள்ள சித்துவின் விவசாய நிலத்தில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


25 புல்லட்டுகள்:
இந்நிலையில் சித்து மூஸ்வாலாவின் உடலில் 25 புல்லட்டுகள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்ட உடற்கூறாய்வில் இத்தகவல் உறுதியாகியுள்ளது. மேலும் அவரது உடல் முழுவதும் கன் பவுடர் எனப்படும் வெடி மருந்தும் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


குறைக்கப்பட்ட பாதுகாப்பு:
முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தேராஸின் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட 420 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு அண்மையில் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு முழுமையாக திரும்பப் பெறப்படாமல் பகுதியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அடுத்த ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.


அரசியலா அண்டர் வேர்ல்டா?
இந்நிலையில் சித்து மூஸ்வாலா படுகொலைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா இல்லை அவரை சுட்டுத்தள்ளியதாக பிஷ்ணோய் கும்பலும் கோல்டி ப்ரார் கும்பலும் போட்டாப் போட்டி போடுவது அண்டர் வேர்ல்ட் காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


கவனம் பெற்ற The Last Ride..
கடைசியாக சித்து மூஸ்வாலா வெளியிட்ட ஆல்பத்தின் பெயர் The Last Ride. கார் புகைப்படத்துடன் கூடிய தி லாஸ்ட் ரைட் என்பதே அவரது கடைசி பாடலாக இருந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ரசிகர்கள், சித்துவின் கடைசி பாடல் போலவே அவரது கடைசி பயணமும் காரிலேயே முடிந்துள்ளது என வருத்தங்களை தெரிவித்திருந்தனர். அதேபோல கடந்த ஆண்டு வெளியான ஒரு பாடலுக்கு  295 என்ற பெயர் வைத்துள்ளார் சித்து. நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட தினமும் 29-5 என்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


குறிப்பாக சித்துவின் கடைசி பாடல்களில் சில  வரிகள் அவரது இறப்பை குறிப்பது போலவே உள்ளது. அந்த வரிகள், ''இளமையிலேயே இறுதிச்சடங்கு நடக்கும் என்ற பிரகாசம் அவனது முகத்தில் தெரிகிறது’’ என்பதுதான். 28 வயதில் படுகொலை செய்யப்பட்ட சித்துவின் மரணத்துக்கு ஏற்ப அந்த வரிகள் இருப்பதாக ரசிகர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தனர்.