பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்:

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவு தர மாட்டேன் என கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மத்திய அரசுடன் ஒத்துழைத்து பாகிஸ்தான் நாட்டினரை மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் சரியான எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை. பெங்களூருவில் நல்ல எண்ணிக்கையில் இருக்கலாம். நாங்கள் மத்திய அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்போம்.

தைரியமாக சொன்ன சித்தராமையா:

பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இருப்பினும், பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்கத் தவறியதன் மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நம்பி மக்கள் காஷ்மீருக்குச் சென்றது வருத்தமளிக்கிறது. இவை வெறும் கோஷங்கள் மட்டுமே, உண்மையில் காணப்படவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 26 பேரின் உயிரை மீண்டும் கொண்டு வர முடியுமா" என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "பெங்களூருவில், கர்நாடகாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் பற்றிய தகவல்களை மாநில அரசு சேகரித்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின்படி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலில் அவர்களுக்கு எந்த விலக்கும் இல்லாததால், பாகிஸ்தான் மாணவர்கள் கூட தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டியிருக்கும். பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியேறச் சொல்லுமாறு மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு, எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தரப்படும் என ராகுல் காந்தி கூறிய நிலையில், சித்தராமையாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.