பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி, நான்கு நாள்கள் தலைமறைவாக இருந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
இவரை பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
நொய்டா குடியிருப்பு வளாகத்தில் பெண் ஒருவரிடம் அவர் மோசமாக நடந்து கொண்ட வீடியோ வைரலானதை அடுத்து, கடந்த வாரம் முதல் தியாகி தலைமறைவாக இருந்தார். ஸ்ரீகாந்த் தியாகி உள்பட மொத்தம் நான்கு பேரை நொய்டா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை செவ்வாய்கிழமை கைது செய்தது.
செவ்வாய்க்கிழமை அன்று மீரட் - டேராடூன் புறவழிச்சாலையின் ஷ்ரதாபுரி பகுதியில் நொய்டா காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து தியாகி கைது செய்யப்பட்டார்.
தியாகி பற்றி தகவல் கொடுப்பவருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தியாகியின் வழக்கறிஞர் சரணடைவதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்காக, கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, குடியிருப்பு வளாகத்திற்கு போலீஸ் அலுவலர்களுடன் வந்த அலுவலர்கள், ஸ்ரீகாந்த் தியாகியின் சட்டவிரோத கட்டிடத்தை இடித்தார்கள். தியாகி, பெண் ஒருவருக்கிடையே நடைபெற்ற கடும் வாக்குவாதம் ஹவுசிங் சொசைட்டியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தியாகியின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் தியாகிக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தியாகி சில மரக்கன்றுகளை நட விரும்பினார். ஆனால் அந்த பெண் விதிகளை மீறியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. தியாகி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டுவதும் தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்