பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொடூர குற்ற செயல்கள் அதிகரித்திருப்பது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலாவே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி காட்டில் எறிந்ததார். இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 


இதற்கிடையே, மெஹ்ராலி காட்டில் இருந்து வெட்டப்பட்ட உடல் பாகங்களை டெல்லி காவல்துறையினர் மீட்டுள்ளனர். மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


அவை ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருத்தி பார்க்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் இருந்த டிஎன்ஏ மாதிரி ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏ மாதிரியுடன் பொருந்தி போனது.


ஷ்ரத்தா தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மறைத்ததாக ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பிறகு வீட்டில் இருந்த ஷர்த்தாவின் புகைப்படங்களை அவர் அழித்துள்ளார்.


அப்தாபின் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து ஷ்ரத்தாவின் பையையும் போலீசார் மீட்டனர் மேலும், அவரது சில ஆடைகள் மற்றும் காலணிகளைக் கண்டுபிடித்தனர்.


இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 ஆயிரம் பக்க வரைவு குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரைவு குற்றப்பத்திரிகையில், 100 சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணு மற்றும் தடயவியல் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.


அதுமட்டும் இன்றி, ஆப்தாபின் வாக்குமூலம், அவரது நார்கோ சோதனை முடிவு மற்றும் தடயவியல் சோதனை அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதை, தற்போது சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


ஷ்ரத்தாவும் அப்தாப்பும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அப்தாபே ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்துள்ளார். 


காவல்துறை கண்டுபிடித்துவிடுமோ என எண்ணி ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 


விசாரணையின் நடுவே, சிசிடிவி காட்சி ஒன்றி வெளியாக அனைவரையும் பதற வைத்தது. அதில், அதிகாலை ஆப்தாப் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை ஆப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை ஆப்தாப் தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு கூறியது.