கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 17,489 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதில்,11,404 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் (ஆக்டிவ் நோயாளிகள்) எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு தற்போது 90 சதவீத ஐசியூ வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.


திடீரென்று, கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மருத்துவ ஆக்சிஜன் தேவை இருமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவ ஆலோசனை இல்லாமல், பொதுமக்கள் தன்னிச்சையாக ஆக்ஸிஜனை நிர்வகித்து வருகின்றனர். இது, சிலிண்டர்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.  


இதற்கிடையே, பெங்களூருவில் உள்ள ஒரு சில மருத்துவமனைகள் மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அறிவித்துள்ளன. நேற்று, மாலை  ஜெயநகரில் உள்ள பெங்களூர் காஸ்ட்ரோஎன்டாலஜி நிறுவனம் (பி.ஐ.ஜி) ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சைப் பிரிவில் உள்ள மூன்று கோவிட்- 19 வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முன்னதாக, நாடு முழுவதும் கோவிட்-19 மேலாண்மைக்கு, மருத்துவமனை கட்டமைப்புகளை அதிகரிக்க, மத்திய அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில்  கடந்தாண்டு ஏற்படுத்தியதுபோல கோவிட் பிரத்யேக வார்டுகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த பிரத்யேக வார்டுகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் உட்பட  அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.