'ஷூட்டர் தாதி' என்று அழைக்கப்படும் பழம்பெரும் ஷார்ப்ஷூட்டர் சந்திரோ டோமர் இன்று காலமானார். அவருக்கு வயது 89. சந்திரோவுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனாவுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று உறுதியானது. இதையடுத்து சந்திரோ மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நம் கனவை நனவாக்க வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்தவர் சந்த்ரோ. 15 வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட சந்த்ரோ தனது 65 வயதில்தான் தனது கனவை நோக்கிய முதல் அடியை எடுத்துவைத்தார். துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொள்வதற்கு ஆசைப்பட்ட தனது பேத்தி ஷெஃபாலியை அழைத்துக்கொண்டு துப்பாக்கிச் சுடும் வகுப்புக்குச் சென்றார். அங்கு எதேச்சையாகத் துப்பாக்கியை தூக்கிப்பிடித்தவருக்கு பிறகு அதுவே மூச்சானது. விடாமுயற்சியும் பேரார்வமும் அவரை பல போட்டிகளில் கலந்துகொள்ள செய்தன. 30-க்கும் மேற்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார். மேலும் உலகின் மிகப் வயதான பெண் ஷார்ப்ஷூட்டர் என்கிற பெருமையையும் பெற்றார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், ‘என் குடும்பத்தில் கணவர் உட்பட உறவினர்கள் அனைவருமே நான் துப்பாக்கிச்சூடு கற்பது தெரிந்ததும் பெரும் அதிருப்தி அடைந்தார்கள்.எனக்கு இந்த வயதிலும் துப்பாக்கிச்சுட உடலில் வலிமையும் உள்ளது என்றால் நான் சிறு வயதிலிருந்தே வீட்டுவேலைகளைச் செய்யத் தொடங்கியதுதான் காரணம்’ என்றார். சந்த்ரோவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் பல பெண்கள் நாட்டுக்காக துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்று தந்திருக்கிறார்கள்.
அவர் மற்றும் அவரது தங்கை பிரகாஷி டோமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ’சாண்ட் கி ஆங்க்’ திரைப்படம் 2019-ல் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் பூமி பெட்னேகர் இருவரும் நடித்திருந்தனர். சந்திரோவின் இறப்பை அடுத்து அவர் குறித்த உணர்ச்சிகரமான பகிர்வை ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டாப்ஸி.
"எங்களின் உத்வேகமாக நீங்கள் என்றும் இருப்பீர்கள்... நீங்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்த அத்தனை சிறுமிகளிலும் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள். என் அழகான ராக்ஸ்டார், உங்களுக்கு தற்போது அமைதி கிடைக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகை பூமி பெட்னேகர், ”சந்திரோ தாதியின் மறைவு என்னைச் சுக்கலாக்கியுள்ளது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன்.அவர் தனக்கான விதிகளை தானே உருவாக்கிக்கொண்டவர். பல சிறுமிகள் தங்கள் கனவை நோக்கிச் செல்வதற்கானப் பாதையை உருவாக்கித் தந்தவர். அவரது வரலாறு அந்தப் பெண்களின் வழியாக வாழும். அவரை இழந்துவாடும் குடும்பத்துக்கு எனது ஆறுதல். அவரைத் தெரிந்துகொண்டது என் வாழ்வின் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.