நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் பலர் தங்களது உறவினர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க சமூக வலைத்தளங்களில் உள்ளிட்டவற்றில் உதவி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஹோமியோபதி மருந்தான Aspidosperma Q 20 என்ற மருந்தை எடுத்துக்கொண்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்ற செய்தி பரவிவருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் சூழலில் இந்தச்செய்தி மிகவும் வேகமாக பரவியது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் இந்தச் செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை பதிவிட்டுள்ளது. அதில், “ஹோமியோபதி மருந்தான Aspidosperma Q 20 ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என்பது போலியான செய்தி. இதுபோன்ற போலியான தகவல்களை ஆயுஷ் அமைச்சகம் கண்டிக்கிறது. மேலும் இது போன்ற விளம்பரங்களை மக்கள் நம்பக்கூடாது” என்று பதிவிட்டுள்ளது. ஏற்கெனவே மக்கள் அனைவரும் ரெம்டெசிவிர் மருந்திற்காக பெரிய வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் இந்த போலிச்செய்தியின் மூலம் அடுத்து Aspidosperma Q 20 காத்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. இந்த சமயத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பதிவு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இது போன்ற போலி செய்திகளை மக்கள் உடனே நம்பவேண்டாம் என்பதே அரசு மற்றும் மருத்துவர்களின் எண்ணமாக உள்ளது.