பீகாரில் கடந்த 25 நாட்களில் சிவ்தஹான் மற்றும் கோவர்தன் வனப்பகுதிக்கு அருகே 12 வயது சிறுமி உள்பட 7 பேரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் புலியை சுட்டு பிடிக்க நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சுடு வீரர், கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில கால்நடை நிபுணர்கள் அடங்கிய வன அலுவலர்கள் குழு, கடந்த ஆறு நாட்களாக புலியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. இருப்பினும், அந்த பகுதியில் புலி தொடர்ந்து, மனிதர்களை கொன்று வந்துள்ளது.


 






இதுகுறித்து வால்மீகி புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நேசமணி கூறுகையில், "புலியை சுட பீகார் தலைமை வனவிலங்கு காப்பாளர் பி.கே. குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். புலியைக் கண்டுபிடிக்க சுமார் 500 வனத்துறை அலுவலர்கள் அடங்கிய குழு தும்ரி கிராமத்திற்கு அருகே சென்றுள்ளது. விலங்குகளை கண்காணிக்க ஆளில்லா விமானமும் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.


புலியை சுட்டு பிடிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர் இதுகுறித்து பேசுகையில், "அந்த புலிக்கு 3.5 வயது இருக்கும். செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அப்பகுதியில் மக்களைக் கொன்று வருகிறது. புலியை கண்டால் சுட்டுக் கொல்ல பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இது உள்ளூர் மக்களுக்கு ஆபத்தானது" என்றார்.


நேற்று ராம் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட டாம்ரோ கோவதன் கிராமத்தில், சஞ்சய் மஹ்தோ என்ற கிராமவாசி காலை கடனை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த நபரை அடர்ந்த கரும்பு வயலுக்கு உள்ளே அந்த புலி இழுத்துச் சென்றது. அந்த நபரின் கழுத்தில் கடித்த தடயங்கள் காணப்பட்டதாகவும், கழுத்து எலும்பு முறிந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவத்தை அடுத்து கிராம மக்கள் வனத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரேஞ்ச் அதிகாரி சுஜீத் குமார் உள்பட சில அலுவலர்களை தாக்கி, சொந்தமான வாகனத்தை சேதப்படுத்தினர்.


வியாழன் இரவு பாகி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்ஹி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அச்சிறுமியை ​​புலி கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வன அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த 20 நாட்களில் இரண்டு முறை புலியை பிடிக்க நாங்கள் நெருங்கிவிட்டோம். ஆனால் தோல்வியடைந்தோம்" என்றார்.


பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகி தேசிய பூங்கா மாநிலத்தின் ஒரே தேசிய பூங்கா ஆகும். இது மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பில் 17.4% (898.45 கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி, 40 புலிகள் காப்பகத்தில் இருக்கின்றன.